-என்.கண்ணன்

கடந்தவாரம் இரண்டு முக்கிய பிரமுகர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் முக்கியமாக கவனத்தை ஈர்ப்பதாக இருந்தன.

முதலாமவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

இவர், காலியில் ஒரு கருத்தரங்கில் ஜனநாயகம், பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு, சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் குறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இரண்டாமவர், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர. 

இன்றைய அரசாங்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை விடவும், ஊடகங்களில் அதிகம் பேசப்படுபவராக மாறியிருப்பவர் இவர்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சிங்கள மக்களின் கருத்துக்களையும் கவனத்தையும் ஈர்க்க முனையும் இவர், பெரும்பான்மையினரின் விருப்பு குறித்து வெளியிட்டுள்ள கருத்து இன்னொன்று.

இந்த இரண்டு பேரினதும் கருத்துக்கள் நேர்மாறானவை. 

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல்வாதியல்ல. அரசியல் நோக்கம் கொண்டவராகவும் தெரியவில்லை.

அனைவருக்கும் நன்றி!- மஹிந்த தேசப்பிரிய - jaffnavision.com

தமிழ் மக்களுக்கான நீதி, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் சகோதரர் அவர்.

காலியில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போது, பெரும்பாலானவர்களால்  தெரிவிக்கப்படும் கருத்து உண்மையானது அல்ல என்றும் சிறியளவிலானோர்வலியுறுத்துவதால், அது பொய் அல்ல என்றும் கூறியிருக்கிறார் மஹிந்த தேசப்பிரிய.

பெரும்பான்மையானவர்கள் கூறுவதே உண்மை என்ற நிலைப்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான், மூன்றாம் உலக நாடுகளின் அழிவுகளுக்கு காரணமாகியிருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுகள் ஜனநாயகம் என்பது தவறு என்பது அவரது நிலைப்பாடு.

இங்கு பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்பது, இன அல்லது மதக் குழுக்களைச் சார்ந்தவர்களை மாத்திரம் சுட்டவில்லை.

அதற்கு அப்பால், அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலும் தான், அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது கருத்து இலங்கையின் இனப்பிரச்சினை, இனவாத அடக்குமுறைகளுடன் கூட தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடிய ஒன்று தான்.

அதாவது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் விருப்பங்களே இலங்கையின் வரலாற்றில் இறுதியான முடிவாக, சரியான முடிவாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள் எல்லாம், அவர்களின் விருப்பங்கள் எல்லாம், புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

இதன் விளைவாகவே, நாட்டில் மூன்று தசாப்த யுத்தமும், பெரும் அழிவுகளும் நிகழ்ந்தன. 

தமிழர்களின் எதிர்பார்ப்பை- கருத்தில் கூட எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லாதவர்களாக பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் இருந்து வந்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய, அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கக் கூடியவர்கள் தான், இன்று நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறான தலைவர்கள் யாரும், அரசியலில் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம், பெரும்பான்மையின மக்களின் வாக்குகளைப் பெறலாம், ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவதிப்படுகின்ற தலைவர்களாலும் அரசியல்வாதிகளாலும் தான் இலங்கை அரசியல் அரங்கு நிரம்பியிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் பெரும்பான்மையினரால் வாக்களிக்கப்பட்ட அரசாங்கம் என்பதால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது வலியுறுத்தப்படுகிறது.

மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை இப்போது அரச தரப்பில் வெளிப்படுத்துபவர் சரத் வீரசேகர.

Hang the 'traitors'– RTD. REAR ADMIRAL WEERASEKARA

உள்ளூராட்சி மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சரான அவர், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையும் ஒழிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.

இது பெரும்பான்மை மக்களின் – மூன்றில் இரண்டு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கம் என்றும், வாக்களித்த மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை தேவை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்ட அரசு அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசு என்றால், எதையும் செய்யலாம் என்பதே அவரதும் தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்களினதும் நிலைப்பாடாக உள்ளது.

பெரும்பாலானவர்களின் விருப்பம் அல்லது கருத்தே உண்மையானது என்பது இவர்களின் நிலைப்பாடு. சிறுபான்மையினர் கோருகின்ற, கூறுகின்ற விடயங்களை இவர்கள் கருத்தில் கொள்வதற்குத் தயாராக  இல்லை.

இங்கு தான் பிரச்சினைகள் தூண்டப்படுகின்றன.

மஹிந்த தேசப்பிரிய கூறுவது போல, பெரும்பான்மையினரின் நிலைப்பாடே சரியானது என்பது தான், சிறுபான்மையினரின் அழிவுகளுக்கு காரணமாகிறது.

சிறுபான்மையினர் நியாயமான அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அதனை பிரிவினைவாதமாக அடையாளப்படுத்துகின்றனர்.

அவ்வாறு கோருபவர்களை பிரிவினைவாதிகளாக காட்டுகின்றனர்,  அதற்காக போராட முனைந்தால், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்துகின்றனர்.

இந்த வரலாறு தான், ஏனைய பல மூன்றாம் உலக நாடுகளில் மாத்திரமன்றி, இலங்கையிலும், பேரழிவுகளை ஏற்படுத்தியது.

அந்த மனோநிலை இன்னும் மாறவில்லை.

மஹிந்த தேசப்பிரிய ஜனநாயகம் தொடர்பாக வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்கள் இன்றைய சூழலில் அரசியல் தலைமைகளால் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியவை.

இலங்கை போன்றதொரு நாடு, நீண்டநாட்களுக்கு புரையோடிப் போன, புண்களுடன் காலத்தைக் கழிக்க முடியாது.

இத்தகைய காயங்களை ஆற்றி, குணப்படுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

அதற்கு, பரந்துபட்ட நோக்கில் – சிறுபான்மையின மக்களின் நலன்கள், கருத்துக்களை, அபிலாசைகளை கவனத்தில் கொள்ளக் கூடிய தலைமைத்துவம் உருவாக வேண்டும்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் தான், இலங்கையில் செழிப்பை ஏற்படுத்த முடியும். ஆனால் சரத் வீரசேகர போன்ற அரசியல்வாதிகள் தான் இப்போது இலங்கையில் வீரர்களாக கணிக்கப்படுகிறார்கள்.

இனவாதத்தைக் கிளப்பி, சிங்கள மக்களை உசுப்பேற்றி, அவர்கள் மட்டுமே நாட்டையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வேண்டியவர்கள் என்ற கருத்தை திணிக்க முனைகிறார்கள்.

சிங்கள அரசியலில் திடீர் கதாநாயகர்களாக மாறியுள்ள இவர்களும், இவர்களுக்கு கிடைத்துள்ள வாக்குகளும், இலங்கைத் தீவின் அமைதியான- நல்லிணக்கமான அரசியல் சூழலுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

சிங்கள பௌத்த பேரினவாதம் தான், அரசியல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் என்பது போன்ற நிலையை இவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள்.

இவ்வாறான நிலையினால், சிறுபான்மையின மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்பட்டு, அது ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இதன் பின்னால் உள்ள ஆபத்தை தான் மஹிந்த தேசப்பிரியவின் கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆனால் என்ன, அவரைப் போன்றவர்களின் கருத்துக்கள் சிங்கள அரசியல் பரப்பிலோ, மக்கள் மத்தியிலோ அதிகம் எடுபடவில்லை.

இனவாதம் கிளப்புகின்ற சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்துகள் தான் அவர்களை ஈர்க்கின்றன.

அதனால் தான், அவர்களால் வெற்றி பெறவும் முடிகிறது. 

அந்த வெற்றியை வைத்து தாங்கள் சொல்வதே சரியானது என்ற முடிவுகளையும் எடுக்கிறார்கள்.

இந்த ஆபத்தை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ளாத வரை இலங்கைத் தீவின் நிரந்தர அமைதி சாத்தியப்படாது.