(செ.தேன்மொழி)
அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில்  தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, பெண்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுரம் - தலாவ பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அநுராதபுரம் பகுதியிலிருந்து தலாவை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி, குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியான பெண் உட்பட நால்வர் பயணித்துள்ளதுடன் அவர்கள் நால்வருமே காயமடைந்துள்ளனர். இதன்போது கார் சாரதியும் காயமடைந்துள்ளதுடன் , அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதியான பெண்ணும் அதில் பயணித்த அவருடைய தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தந்தையும் , 32 வயதுடைய அவருடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்து மூன்றுபேரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதுடன் , இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.