உலகவாழ் அனைத்து இசை ரசிகர்களையும் மீளாத்துயரில் அழ்த்திச் சென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க கோரியிருந்ததாக  செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டையைச் சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்யுமாறு எஸ்.பி.பி. அறிவித்திருந்தார்.  

இதையடுத்து, தனது சிலை ஒன்றையும் செய்துகொடுக்கும்படி, எஸ்.பி.பி. கடந்த ஜூன் மாதம் சிற்பி உடையாரிடம் கேட்டுள்ளார். மேலும், ஊரடங்கு சமயம் என்பதால் நேரில் வரமுடியாது என்று கூறி தன்னுடைய புகைப்படங்களையே மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார். 

இதனிடையே, எஸ்.பி.பி. கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்ந்தார். வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவுடன் சிலைகளை அவருக்கு காட்ட வேண்டும் என ராஜ்குமார் இருந்ததாக கூறப்படுகிறது. 

எஸ்.பி.பி. எதனையும் முன்னரே யோசித்து செயல்படக்கூடியவர் என்ற ஒரு பொதுவான கருத்து இருக்கும்பட்சத்தில், தனது சிலைக்கு தானே அமைக்கக்கோரிய இந்த செய்தியும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.