சோமாலியாவின் தென் மேற்குப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 16 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், சிறைபிடிக்கப்பட்ட 40 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் குவினருக்கு எதிரான இந் நடவடிக்கையானது தலைநகர் மொகாடிஷுலிருந்து 62 கிலோமீட்டர் (38 மைல்) தொலைவில், லோயர் ஷாபெல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறைந்தது 40 சிறுவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு இராணுவத் தளபதி அகமது ஹசன் சாலட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை கடத்தி, அவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்த திட்டமிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை சீர்குலைக்கும் குழுவின் திறனைக் கட்டுப்படுத்த அல்-ஷபாபிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் தொடரும் என்று லோயர் ஷாபெல் பிராந்தியத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தயுள்ளனர்.