(ஆர்.ராம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்காலம், பாதுகாப்பு, முதன்மைத்தானம் பற்றியே அதிகளவில் சிந்தித்தாரே தவிர நாட்டைப்பற்றியோ, தேசியப்பாதுகாப்பு பற்றியோ அதிகளவில் சிந்தித்திருக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கியசெவ்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான வினாக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு புரட்சியின் பின்னரான சூழலில் பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்கு என்னையும், பிரதமரையும் அழைக்க வேண்டாம் என்றே அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அத்துடன் எங்களுடன் கூடுதலான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டாம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில் இந்தியாவிடமிருந்து தாக்குதல்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக நாம் அறிந்திருக்கவே இல்லை. அவ்வாறான எச்சரிக்கைகள் எமது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்ப பட்டுள்ளன என்பதை தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னரேயே எனக்கு அறியக் கிடைத்தது. அதுவொரு துரதிஷ்ரவசமான விடயமாகின்றது.

மேலும் அரசியல் யாப்பு புரட்சியின் பின்னர் பொலிஸ்துறை, பாதுகாப்புத்துறை, புலானய்வுக் கட்டமைப்புக்கள் என்று அனைத்தையும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கையாண்டார். என்னுடனோ அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடமோ அவர் எந்தவொரு விடயத்தினையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

அரசியல் யாப்பு புரட்சிக்கு முன்னதாக பாதுகாப்புச் சபையின் ஓரிரு கூட்டங்களில் சமூக ஊடகங்கள் மூலமாக சஹ்ரான் முன்னெடுக்கும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அச்சமயத்தில் பாதுகாப்புச் சபையின் பிரதானியான மைத்திரிபால சிறிசேனா, பொலிஸாரை அவ்விடயத்தில் தலையிடுவதை குறைத்து புலனாய்வாளர்களை அவ்விடயத்தில் அதிகமாக தலையிடுமாறு வலியுறுத்தினார். அதற்கமைவாக அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்தார்கள்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதிஆணைக்குழுவின் விசாரணைகளில் பல விடயங்கள் வெளியாகின்றன. ஆரம்பத்தில் இவ்வாறான ஆணைக்குழுவினை அமைத்தபோது அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. ஆனால் தற்போது பல தகவல்கள் அம்பலமாகின்றன. ஜனாதிபதி ஆணைக்குழு சிறந்த விடயமாக இருக்கின்றது. அதன் ஊடாக மக்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது தெரியவரும்.

உயிர்த்த ஞாயிறு கொடூர சம்பவத்திற்கு அப்போதைய அரசாங்கம் என்ற வகையில் நாம் பொறுப்பேற்றிருந்தோம். ஆனால் மைத்திரிபால சிறிசேன அனைத்து அதிகாரங்களையும் தம்மகத்தே வைத்துக்கொண்டிருந்தமையால் தான் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்தது. ஆகவே அதற்கான முழுமையான பொறுப்பனையும் அவர் கூறியே ஆக வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவைப்பொறுத்தவரையில் அவர் தான் எவ்வாறு பாதுகாப்பாக முதன்மைத் தானத்தில் இருப்பது என்றும், தன்னுடைய எதிர்காலம் பற்றியுமே அதிகளவில் சிந்தித்தார். நாட்டைப்பற்றியோ அல்லது தேசிய பாதுகாப்பினைப் பற்றியோ அவர் சிந்திக்கவில்லை.

இவ்விதமான நிலைப்பாடுகள் தான் தேசிய பாதுகாப்புக்கு பெரும் குந்தகத்தினை ஏற்படுத்தியிருந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது என்றார்.