-ஆர்.ராம்-

2009அவலத்திற்கு பின்னரான தசாப்தத்தில் தமிழ்த் தேசியக் கொள்கையில் செயற்படும் கட்சிகளை ‘பொது தளமொன்றுக்கு’ கொண்டு வருவதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் முயற்சி முதல் இறுதியாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ‘அனுபவமற்ற நகர்வு’ வரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே ‘சாண் ஏற முழம் சறுக்குபவையாக’ இருந்தன. 

இதன் காரணமாக தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள கட்சிகள் ஆகக்குறைந்தது பொது விடயங்களிலாவது ஒன்றிணைவதற்கு பதிலாக பிளவுகளும், பிரிவுகளும் தான் அதிகரித்தன. குறிப்பாக 2015இற்கு பின்னர் இந்த நிலைமைகள் மிகவும் மோசடைந்தன. இதனால் புதிய கட்சிகளும், புதிய அரசியல் கூட்டுக்களும் முளைத்தன. 

ஜனநாயகத் தளத்தில் பல்வேறு கட்சிகளும், அரசியல் கூட்டணிகளும் இருப்பது சிறந்தது என்று கருதப்பட்டாலும் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் மத்தியில் இத்தனை கட்சிகள் ஆரோக்கியமற்றதே.

எனினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசியக் கட்சிகளும், அதன் பங்காளிகளும் தலையெடுக்கும் வரையில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தலைவர்களும், பிரதிநிதிகளும் இதனை உணரத் தலைப்பட்டிருக்கவில்லை.

ஒருங்கிணைதல், அல்லது கூட்டிணைதல் பற்றிய பேச்சுக்களை முன்னெடுக்கின்றபோது, ‘நாங்கள் அவர்களை வெளியேற்றவில்லை அவர்களே வெளியேறினார்கள்”, ‘அவர்கள் கொள்கையில் இல்லை’ என்று பொதுத்தளமொன்றை நோக்கி  ஒரு அடிகூட வைக்க முடியாது ‘முற்றுப்புள்ளி’ வைக்கும் வகையிலேயே இவர்கள் பிரதிபலித்தார்கள். ஆனால் தற்போது நிலைமைகள் மாறியுள்ளன. எந்தவொரு ‘நடுநிலையாளர்களும், பொதுத் தரப்பினரும்’ இன்றி தமிழ்க் கட்சிகள் தாமாகவே ஒருங்கிணைந்துள்ளன. 

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் தேர்தல் தோல்வியும் அதன் பின்னர் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு அவர் பரிந்துரைக்கப்படாது விட்டமையும் தொடர்ச்சியான காலத்தில் ‘கட்சியினுள் ஏற்பட்ட கைமீறிய நிலைமைகளும்’ கேள்விக்குறியாக்கப்பட்ட அவருடைய ‘தலைமைத்துவ ஆளுமையும்’ உட்கட்சி முரண்பாடுகளின் போது கட்சிக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அவருக்கு ‘நீட்டப்பட்ட ஆதரவுக் கரங்களும்’ அடிப்படையாக அமைகின்றன.

இரண்டாவது, 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சி அனுபவத்தினை கொண்டிருக்கும் தமிழர்கள்,  எதிர்பார்த்ததைப் போன்றே ‘ஜனநாயக விரோத, மற்றும் மனிதாபிமான குரோத’ செயற்பாடுகள் 2019 நவம்பருக்கு பின்னர் மெல்லென ஆரம்பித்து தற்போது முழு வீச்சுப் பெற்றிருக்கின்றன. 

தென்னிலங்கையில் ராஜபக்ஷவினர் ஆட்சி, அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக அதியுச்ச சிங்கள தேசிய வாதத்தினையும், பௌத்த அடிப்படை வாதத்தினையும்   உமிழ்ந்திருந்தனர். இந்த இரண்டு வாதங்களையும் தொடர்ச்சியாக கூர்ப்படையச் செய்தும் வருகின்றனர்.

பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமது இருப்புக்களை வலுப்படுத்தி வரும் ராஜபக்ஷவினர் தமிழர்களின் உணர்வு ரீதியான விடயங்களில் நேரடியாகவும், அரச கட்டமைப்புக்களின் ஊடாகவும் கிடுக்குப்பிடியை மேற்கொள்கின்றனர். இந்த நிலைமை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ‘எதிர்ப்பு அரசியல்’ வலுவடைவதற்கும் அதன்பால் ஒருங்கிணைவதற்கும் அடிகோலியுள்ளது. 

பொதுத் தேர்தலின் பின்னர் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வினை முன்னகர்த்த காத்திருந்த தமிழ்த் தேசியத் தரப்புக்களுக்கு இந்த இரண்டு விடயங்கும் அடுத்த கட்டத்திற்கான “வாயிலைத்” திறந்து விட்டிருக்கின்றது. இந்த ‘வாயில்’ ஊடாக ஒருங்கிணையத் தயாராகியுள்ள தமிழ்த் தரப்புக்கள் தேர்தல் அரசியலின் முக்கியத்துவத்தினைக் கைவிட்டு தம்மக்கள் சார்ந்த உணர்வு மற்றும் அடிப்படை விவகார விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பயணிக்க வேண்டும் என்றே அனைத்து தரப்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல்களுக்கு பொலிஸார் நீதிமன்றங்களுக்கு ஊடாக பெற்றுள்ள தடைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போது ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தரப்பினர் தீர்மானித்துள்ளனர். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் தொடர்ந்தும் மறுக்கப்படவுள்ள நினைவேந்தும் உரிமை  உள்ளிட்ட அனைத்திற்காகவும் ஒருமித்து போராடப் போவதாகவும் சமிக்ஞை வெளியிட்டுள்ளனர். 

தமிழ்த் தரப்புக்களுக்கு  இடையேயான இந்த ஒருங்கிணைவின், மூல கர்த்தா மாவை.சோ.சேனாதிராஜாவே. அந்த வெகுமதியை வேறு யாரும் தட்டிப்பறித்து சொந்தங் கொண்டாட முடியாது. அவருடைய ‘படியிறங்கிய அணுகுமுறைகள்” கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றவர்களின் “மன இறுக்கத்தையும்” கரைத்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிஸ்தர்களின் தியாகங்கள், தமிழர்களின் உணர்வுகளுடன் என்றுமே பின்னிப்பிணைத்திருப்பவை. அந்த விடயங்களில் அரசாங்கம் ‘கை’ வைக்கின்ற போது  இயல்பாகவே தமிழர் தாயகத்தில் “கொதிநிலை” ஏற்படும். அந்த “கொதிநிலை”  வடக்கு –கிழக்கில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உயிர்கொடுக்க ஆரம்பித்திருக்கின்றது. 

தமிழர் உரிமை போராட்டப் பயணத்தில் தென்னிலங்கையின் கிடுக்குப் பிடிகளும், தேர்தல் தோல்விகளும் தமிழ்த் தேசிய அரசியல் புதிய கோணங்களில் மீள் எழுச்சி அடைவதற்கு வித்திட்டிருக்கின்றது, வித்திடவும் இருக்கின்றது.

1970ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டையில் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வியே 13பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் கொண்டிருந்த தந்தை செல்வநாயகத்தினை தேர்தலில் தோல்வி அடைந்திருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வீட்டு வாயிற்படியேறி “ஒன்றிணைவுக்காக” அழைப்பினை விடுக்கச் செய்வதற்கான “மூளையாகவும்” அமைந்தது.

அப்போதைய  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ‘தன்னை நோக்கிய அதிகாரக் குவிப்பை மையப்படுத்திய, சிறுபான்மையினரை ஒடுக்கும் கடும்போக்கான செயற்பாடுகளே’ தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினை உருவாக்க அடித்தளமிட்டது. ‘தனிநாட்டு’ கோரிக்கையுடன்  1977இல் போட்டியிட்டு 18ஆசனங்களுடனான பெரு வெற்றியை அந்தக் கூட்டணிக்கு பெற்றுக்கொடுத்தது. வரலாறு தற்போது திரும்பியிருக்கிறது. அவ்வளவு தான். 

2010இல் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்திற்குப் பின்னர் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்தார் சுமந்திரன். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தோல்வியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் வெளியேற்றமும் கூட்டமைப்பிலே ‘எல்லாம் சுமந்திரனே’ என்ற நிலைமையை  உருவாக்கியது. 

கடந்த தசாப்த தமிழர் அரசியலில் சுமந்திரன் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது ஒருங்கிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் தளத்தில் சுமந்திரனோ  அவரது  ஆதரவு அணியினரோ இல்லை. ஒருங்கிணைப்பில் ஈடுபட்டவர் சுமந்திரன் பிரதிநிதித்துவம் வகிக்கும்  கட்சியின் தலைவர். 

ஜனாதிபதி சட்டத்தரணி, இராஜதந்திரி என்று பன்முக ஆற்றல் மிக்கவர் என்று புகழாரம் சூட்டப்பட்டவர் சுமந்திரன். 2015 முதல் 2019 நவம்பர் வரையில் தமிழர் அரசியலில் ஆதீத ஆதிக்கம் செலுத்தியவர். வடக்கிற்கும் தெற்கிற்குமான “நடுநிலையாளராக” இருந்தவர். ஆட்சியாளர்களின் “சாவிக்கொத்தை” கையில் வைத்துக்கொண்டிருந்தவர். அத்தகைய ஒருவர்  இப்போது தவிர்த்து விடப்பட்டிருக்கின்றார். 

தன் அரசியல் குருவான சம்பந்தனின் முதுமை, ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியத் தரப்பின் “தள்ளிவைப்பு”, நினைவேந்தல் உரிமைக்கான  கையொப்பமிடலில் அண்மைக்கால நண்பர் சிறிதரன் கூட அரவணைக்காமை ஆகியவற்றால் சுமந்திரன் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டும் விட்டார். 

“எதிர்நிலை” கருத்துக்களை வெளிப்படுத்தி இரண்டு தேர்தல்களில் சுமந்திரன் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரன் எதிர்ப்பு வாதம் உச்சமடைந்திருக்கின்றது. அதற்கான சிறந்த உதாரணம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம். 

அதுமட்டுமன்றி ஆயுதப்போட்டம் எதிரான கொள்கையை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவது, தன்னிச்சையாக செயற்படுவது என்று கட்சிக்குள்ளும் வெளியிலும் சுமந்திரன் மீது ‘கொதிப்படைபவர்கள்’ காரணங்களை அடுக்குகின்றார்கள்.  

அப்படியிருக்க, தற்போது தெற்கில் வலுவாகியுள்ள ராஜபக்ஷவினரின் ஆதரவுத்தளம் வடக்கில் எதிர்ப்பு அரசியலை திடமாக மையப்படுத்தியிருப்பதால் தமிழ் தேசிய பரப்பில் சுமந்திரனுக்கான ‘வகிபாகம்” தகர்த்தப்பட்டிருக்கின்றது

வடக்கிலும் கிழக்கிலும் “தென்னிலங்கை எதிர்ப்பு வாத அரசியல்” அலை அடிக்கிறது. அந்த அலையால் ஏற்பட்டுள்ள ‘குவியம்” நிச்சயம் மேலும் வலுவடையும். அவ்வாறு வலுவடையும் போது தற்போது ஒருங்கிணைந்த தரப்புக்களின் பரிமாணமும் மாற்றமடையும். தமிழ் அரசியல் கட்சிகளின் திரட்சியே மாவையின் அரசியலுக்கான அடுத்த கட்டத்திற்கான அடிப்படை. 

சுமந்திரனுடான ஊடாட்டம் தற்போது ஒருங்கிணைந்துள்ள அரசியல் தளத்தில் எத்தகையை பிரதிபலிப்புக்களைச் செய்யும் என்பது அறியாதவர் அல்ல மாவை. ஆக, கட்சியின் ஒற்றுமையா, தமிழ்த் தேசிய அரசியல் திரட்சியா எதனை எப்படி பாதுகாக்க, பயன்படுத்தப் போகின்றார்?

தனது 33ஆவது நினைவேந்தலுக்கு பின்னாலிருக்கும் இந்த ‘இலட்சிய உழைப்புக்களையும்’ வானத்தில் தோழர்களுடன் இருக்கும் பார்த்திபன் நிச்சயம் பார்ப்பான்.