தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை (26.09.2020) இடம்பெற்ற விபத்தில் புதிய காத்தான்குடி 6, அக்பர் பள்ளி வீதிப் பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனான முஹம்மது அலியார் முஹம்மது ருஷ்கி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அதன் டயரில் காற்று சடுதியாக வெளியேறிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி மீது  மோதியுள்ளது.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டிக்கு பின்னால் நின்றிருந்த சிறுவன் மீது முச்சக்கரவண்டி மோதியதனால் சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.