அன்புடன் ருவான் விஜேவர்தன அவர்களுக்கு,

அநேகமாக அடுத்த வருட ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வருவீர்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு உங்களுக்கு எழுதலாமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உங்களுடன் டட்லி சேனாநாயக்க பவுண்டேஷனில் பணியாற்றுகின்ற பெண்மணி ஆங்கிலப் பத்திரிகையில் உங்களைப்பற்றி எழுதிய கட்டுரையை வாசித்த பிறகு உடனடியாகவே கடிதத்தை எழுதும் உந்துதல் பிறந்தது. 

உங்களின் நற்பண்புகளையும் உங்களின் பெருமைக்குரிய பூர்வீகத்தையும் பற்றி அந்தப் பெண்மணி விரிவாக எழுதியிருக்கிறார். இவ்வருட இறுதியில் உங்கள் மைத்துனர் ரணில் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து வெளியேறும் போது 'கனவான் அரசியல் யுகம்" இலங்கையில் முடிவிற்கு வரும் என்று அவர் கவலை வெளியிட்டிருக்கிறார். 

மேலும் டட்லியையும் ரணிலையும் போல நீங்களும் குடும்ப அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டீர்கள் என்றும் கட்சியை கைவிட்டு ஓடமாட்டீர்கள் என்றும் கட்சியின் கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கப் பாடுபடுவீர்கள் என்றும் நம்பிக்கையுடன் அவர் எழுதியிருக்கிறார்.

டட்லியும் கூட 'கனவான் அரசியலை" செய்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. ரணிலுடன் கனவான் அரசியல் முடிவிற்குவரும் என்று அந்தப் பெண்மணி கவலைப்பட்டிருப்பது அதே அரசியலை நீங்கள் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் என்று நம்புகிறேன்.

ஆனால், இலங்கையில் கனவான் அரசியலுக்கு இடமிருக்கிறதா? பழிபாவத்திற்கு அஞ்சாத பேர்வழிகளின் குகையாக மாறியிருக்கும் அரசியலில் உங்களது எதிர்காலம் இடர்மிகு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். அத்தகைய போராட்ட அனுபவங்களுடன் இதுவரையான உங்களது வாழ்வு அமைந்திருக்கவில்லை. இனிமேல் கரடுமுரடான பாதையில் அரசியலை செய்வதற்கு உங்களை எந்தளவிற்கு தயார்ப்படுத்தப்போகிறீர்கள்? பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ரணில் கனவான் அரசியல்வாதி என்று ஒரு பிம்பம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அந்த பிம்பம் கட்சியின் தலைமைத்துவத்தை கைவிடாமல் அவர் அழுங்குப்பிடியாக தொங்கிக்கொண்டே இருந்ததால் சேதமடைந்துவிட்டது. அந்தப் பெண்மணி கூறியிருப்பதைப்போன்று ரணில் குடும்ப அரசியலை வெறுத்தவர் என்று இப்போது கூற எவராலும் முடியாது.

ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை நீங்கள் பெறுவதற்கு முன்னோடியாக நீங்கள் கட்சியின் பிரதித்தலைவராக தெரிவாவதற்கு வழிசெய்ததன் மூலம் அவர் எதிர்காலத்தலைமைக்கு தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே விரும்புவதை வெளிக்காட்டியிருக்கிறார். அந்தப்பதவி முன்னர் சஜித்திடம் இருந்தது. சஜித் மீண்டும் ஐ.தே.க.விற்குள் வந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதில் ரணில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகிறார்.

எனக்கொரு சந்தேகம். அடுத்த வருட தொடக்கத்தில் நீங்கள் கட்சியின் தலைவராக எந்தப் பிரச்சினையுமின்றி வருவதற்கு மைத்துனர் இடம்கொடுப்பாரோ அல்லது ஏதாவது சாக்குப்போக்கைச் சொல்லி மேலும் சிலகாலம் தலைமைத்துவத்தில் தொடருவதற்கு யோசித்துவைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், தலைமையை விட்டுச்செல்லுமாறு நீங்கள் அவரை வலியுறுத்தி சண்டைபிடிக்க மாட்டீர்கள் என்று அவருக்குத் தெரியும். கட்சித்தலைமையை பொறுப்பேற்று மீண்டும் மக்கள் செல்வாக்குடையதாக மாற்ற முன்வருவதாக கரு ஜயசூரிய அறிவித்த போதிலும்கூட ரணில் மசியவில்லை. பாவம் கரு இறுதியில் மாதுளுவாவே சோபித தேரரின் இயக்கத்திற்குத் தலைமைதாங்கப்போய்விட்டார்.

ஐ.தே.க ஒருகாலத்தில் மாமன் - மருமகன் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால் சேனாநாயக்கவின் குடும்ப ஆதிக்கம் டட்லியின் மறைவுடன் முடிவிற்கு வந்து விஜேவர்தன குடும்பத்தைச் சேர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் தலைமை போனது. ஜே.ஆருக்கு பிறகு பிரேமதாஸவிடம் கட்சியின் தலைமை சென்றிருந்தாலும் கூட அவரது குடும்பம்  அரசியலுக்குள் வருவதற்கு இடமளிக்கக்கூடியதாக அரசியல் அதிகார வர்க்கத்தின் பழமைவாத நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் இருக்கவில்லை. 

தந்தை கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்தே தலைமையை பெறக்கூடியதாக இருந்தது என்பதைத் தெரிந்திருந்தும் சஜித் ஐ.தே.க.வின் தலைமைக்கு தன்னால் வரமுடியும் என்று நம்பிச்செயற்பட்டார். ஆனால் ரணிலின் பிடிவாதத்திற்கு முன்னால் சஜித்துக்கு தோல்வியே. அவர் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர். 

இப்போது கட்சி விஜேவர்தன குடும்பத்தவரின் கைகளிலேயே தொடர்ந்திருப்பதற்கு வகைசெய்திருக்கிறார் ரணில். நீங்கள் இலங்கையில் பத்திரிகைத்துறை பாரம்பரியத்தைக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். லேக்ஹவுஸ் தாபகர் டி.ஆர்.விஜேவர்தன உங்கள் பாட்டனார் (தந்தையாரின் தந்தை). விஜேவர்தனவின் மகளின் மகன் ரணில். விஜேவர்தனவின் சகோதரியின் மகன் ஜே.ஆர். பிரேமதாஸவின் மரணத்தையடுத்து விஜேதுங்க ஜனாதிபதியானதும் பிரதமராக ரணில் வந்தபோது பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் 'அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எந்தத் துறையில் ஈடுபட்டிருப்பீர்கள்?" என்று கேட்கப்பட்ட போது 'நான் ஒரு பத்திரிகை ஆசிரியராகப் போயிருப்பேன்" என்றுதான் பதிலளித்தார். அந்தளவிற்கு உங்கள் குடும்பத்தவர்களிடம் பத்திரிகைத்துறை ஈடுபாடு ஆழமாக இருக்கிறது. இன்றும் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமொன்று உங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

மறுபுறத்தில் நீங்கள் சேனாநாயக்க குடும்பத்தின் பிள்ளையும் தான். உங்களது தாயார் டி.எஸ்.சேனாநாயக்கவின் மகன்களில் ஒருவரான ரொபேர்ட்டின் மகள் (ருக்மனின் சகோதரி). நீங்கள் ஐ.தே.க.வின் தலைவராக வரும் போது கட்சி விஜேவர்தன - சேனாநாயக்க கலப்புக் குடும்பங்களின் வாரிசிடம் வந்துசேர்கிறது.

குடும்ப அரசியலைப்பற்றி நான் அதற்குமேல் எதுவும் பேசவிரும்பவில்லை. சஜித்தை ஓரங்கட்ட புறப்பட்ட ரணிலுக்கு தேர்தலில் அவர் புகட்டிய பாடம் மிகவும் உறைப்பானது. பாராளுமன்றத்தின் ஒரு ஆசனத்திற்குக்கூட மக்களால் தெரிவுசெய்யப்படாத கட்சியாக மிகப்பெரிய பழைய கட்சியை பரிதாபநிலைக்குத் தள்ளிவிட்டார் சஜித். நீங்களும் கூட உங்கள் கட்சி கடந்த காலத்தில் பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் மீண்டும் பெரும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள். கடந்தகாலத் தோல்விகளை இந்தத் தோல்வியுடன் ஒப்பிடுவது பொருத்தமில்லை. ஜே.வி.பி.யை விடவும் குறைவாக, வெறுமனே 250,000 வாக்குகளையே உங்களால் பெறமுடிந்தது. அதுபோக கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தைக்கூட ஒன்றரை மாதங்களாக நிரப்பமுடியாமல் தத்தளிக்கிறீர்களே.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் உங்களுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால்,ஐ.தே.க.வை அவர்கள் தங்களது கூட்டணியின் ஒரு பங்காளியாக ஏற்றுக்கொள்வதற்கே தயாராக இருக்கிறார்கள். சஜித் ஐ.தே.க.வின் தலைமையில் தனக்கு நாட்டமில்லை என்றே கூறிவிட்டார், சுதந்திரக்கட்சியின் தலைமை தனக்கு வேண்டாம் என்று மஹிந்த கூறியதைப் போன்று. 

ஐ.தே.க.வை பலப்படுத்துவது ஒருபுறமிருக்க, அதை சஜித்தின் கூட்டணியில் ஒரு கௌரவமான பங்காளியாகவாவது எவ்வாறு கொண்டுபோகப்போகிறீர்கள்? உங்களுக்கு முன்னாலுள்ள பெரிய சவால் அது என்றே நான் நினைக்கிறேன். இதற்குமேல் இப்போதைக்குக்கூற எதுவுமில்லை என்பதால் கடிதத்தை முடிக்கிறேன்.

இப்படிக்கு,

ஊர்சுற்றி.