(செய்திப்பிரிவு)

இருநாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒரு கோடி 50 இலட்சம் நன்கொடையை வழங்குவதாக இந்தியா அறிவித்திருக்கிறது என்று புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சு நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.

'இருநாடுகளுக்கும் இடையிலான நெடுங்கால நாகரிக பாரம்பரியத்தையும் கலாசார மரபுரிமையையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒரு கோடி 50 இலட்சம் டொலர்கள் நன்கொடை உதவியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்' என்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற இணையவழி இருதரப்பு உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சின் இந்துசமுத்திரப் பிராந்திய பிரிவிற்கான இணைச்செயலாளர் ஆம்த் நாராங் தெரிவித்தார்.

'இந்த நன்கொடை பௌத்தமதம் சார்ந்த விவகாரங்களில் இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான பிணைப்பை மேலும் ஆழமாக்க உதவும்' என்றும் நாராங் கூறினார்.

கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் நடைபெற்ற இந்த இணையவழி மாநாட்டின் வெற்றி இருதரப்பு உறவுகளை மேலும் முன்னெடுப்பதற்கான தலைவர்கள் மட்டத்தில் இருக்கின்ற உயர்ந்த பற்றுறுதியைப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளிலுள்ள முழு அளவிலான விவகாரங்கள் குறித்து ஆராய்ந்ததுடன் பொதுவான அக்கறைக்குரிய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

'உத்தர பிரதேசத்தின் குஷி நகருக்கு ஆரம்பிக்கப்படும் விமானசேவையின் முதலாவது விமானத்தில் இலங்கையிலிருந்து பௌத்த யாத்திரீகர்கள் குழு விஜயம் செய்வதற்கு இந்தியா வசதி செய்யும்' என்று அறிவித்த நாராங், பிரதமர் மோடியுடனான தனது உச்சிமாநாட்டில் இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாண கலாசார நிலையம் நிர்மாணிக்கப்படுவது குறித்து பிரதமர் ராஜபக்ஷ விசேடமாகக் குறிப்பிட்டார். அந்த கலாசார நிலையம் அநேகமாக பூர்த்தியாகும் நிலையில் இருக்கிறது. அதனைத் திறந்துவைப்பதற்கு பிரதமர் மோடிக்கு ராஜபக்ஷ அழைப்புவிடுத்திருக்கிறார்.

இலங்கைத்தரப்பினால் இந்தியாவின் சில உற்பத்திகளின் இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக தடைகள் விரைவில் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டதாகவும் இணைச்செயலாளர் கூறினார்.

அவ்வாறு தளர்த்தப்படுவது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பொதுமக்களுக்கும் பயனுடையதாக அமையும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார் என்றும் நாராங் கூறினார்.

இந்த இணையவழி மாநாட்டில் இந்தியப் பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா ஆகியோரும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட வேறுசில அமைச்சர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.