அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாளையதினம்  (2020.9.28) நீதிமன்றம் செல்ல உள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹகீம் தெரிவித்தார்.

கண்டி, மடவளையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வையடுத்து ஊடக வியலாளர்கள் எழுப்பியகேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜே.எம். சித்தீக் எழுதிய 'தப்புக்கணக்கு' சிறுகதை நூல் வெளியீட்டு விழாவின் பின் ஊடகங்களுக்கு கருத்துத்துத் தெரிவித்த ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்த்தில் உள்ள நல்ல அம்சங்களை பாதுகாக்கும் அதேநேரம் அதன் குறைபாடுகளை  நீக்குவதில் தவறில்லை. 

அதனை முற்று முழுதாக நீக்கி புதிய விடயங்கள் சேர்க்கப்படுவது 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன காலத்து அதிகாரத்தையும் மிஞ்சிய அதிகாரங்களை ஏற்படுத்தப்படலாம். 

அப்படியாயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்களை பாதிப்பதாக அமைந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது, பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பும் தேவை என்ற நிலை ஏற்படலாம். எனவே அது விடயமாக நாம் நீதிமன்றை நாட உள்ளோம் எனத் தெரிவித்தார்.