(செய்திப்பிரிவு)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று சனிக்கிழமை இணையவழி மூலமான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். 

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியம் என்றும் இலங்கைப்பிரதமரிடம் மோடி வலியுறுத்தியிருப்பதாகவும் மாநாட்டில் அவரது ஆரம்ப உரை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நல்லிணக்கத்தை சாதிப்பதற்கு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியத்திற்கான தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதை நோக்கி இலங்கையின் புதிய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துமாறும் நல்லிணக்க முயற்சிகளின் ஒரு அங்கமாக தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதை நோக்கி அரசாங்கம் செயற்படுவதை உறுதிசெய்யுமாறும் இந்தியப் பிரதமர் மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக கிரமமான சர்வதேச விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தற்காலிக ஏற்பாடொன்றை முன்னெடுக்க வேண்டுமென்ற யோசனையையும் இந்தியப்பிரதமர் இந்தப் பேச்சுவார்த்தையின் போது முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.