(செய்திப்பிரிவு)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று சனிக்கிழமை நடத்திய இணையவழி இருதரப்பு உச்சி மாநாட்டின் போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த கலந்துரையாடலில் இருதரப்பு உறவுகள் பற்றி பரந்தளவில் ஆராயப்பட்டது.

இந்த இணையவழி உச்சி மாநாட்டில் ஆரம்பித்து உரையாற்றிய பிரதமர் மோடி,

 இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரம்மாண்டமான தேர்தல் வெற்றியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க உதவும்.

'உங்களது கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று வந்திருக்கிறது. இரு நாடுகளிலும் மக்கள் புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் எம்மை நோக்குகிறார்கள். ' என்று மோடி குறிப்பிட்டார்.

தனது அரசாங்கத்தின் 'அயலகம் முதலில்' என்ற கொள்கையிலும் பிராந்தியத்தில் உள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் தான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா முன்னுரிமை கொடுக்கிறது என்றும் அவர் கூறினார்.

அயல் நாட்டின் தலைவர் ஒருவருடன் இந்திய பிரதமர் இத்தகைய இருதரப்பு உச்சி மாநாட்டை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். பிரதமர் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நடத்துகின்ற முதலாவது இராஜதந்திர இணையவழி கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்தது.

ஒட்டுமொத்த பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் தற்போதிருக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது. 

(பி.டி.ஐ.)