இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு

(நா.தனுஜா)
இலங்கையில் தமிழர் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் நினைவு கூறப்படுவதைத் தடைசெய்யும் வகையில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கண்டித்து இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த 1987 ஆம் ஆண்டில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியறிக்கைகளால் கடும் விசனமடைந்திருக்கின்றோம். அதுமாத்திரமன்றி நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குசெய்தவர்கள் கைது செய்யப்பட்டமையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் தமிழர் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை அவர்கள் நினைவு கூறுவதைத் தடைசெய்யும் வகையிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளையே இது பிரதிபலிக்கின்றது. அதுமாத்திரமன்றி போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப்படைகள் செயற்பட்டு வந்திருப்பதுடன் அந்த மக்களை அச்சுறுத்தியும் கண்காணித்தும் வந்திருக்கிறது.

மேலும் கடந்த வாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதுடன் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உள்ளடங்கலாக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட்டமையை வரவேற்கின்றோம்.

தமிழர் போராட்டத்துடன் தொடர்புடைய வகையிலான நினைவுகூறல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அவற்றில் கலந்துகொள்பவர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதுடன் கண்காணிப்பிற்கும் உள்ளாகுவது தொடர்பில் நாம் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம். எது எவ்வாறிருப்பினும் தற்போதைய உயர்ந்தபட்ச சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கமும் தமிழர்கள் உரிமைகள் குறித்து கவனம்செலுத்தாத ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றமும் மிகவும் ஆபத்தானதொரு கலவை என்றே கூறவேண்டும்.