உலகளவில் இசைப்பிரியர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட  எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமது ரசிகர்களுக்காக பல முறைகளிலும் உதவிகளை செய்துள்ளார். குரலினாலும் செயலினாலும் அனைவரையும் அரவணைக்கும் இவரின் இயல்பு இன்று அவரை அனைவரும் கொண்டாடும் மா மனிதராக உயர்ந்து நிற்க செய்துள்ளது.

இதற்கிடையில், ரசிகர்கள் மீது இவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு பார்வை இழந்த இலங்கை ரசிகர் ஒருவருக்கு பாடும் நிலா வழங்கிய ஆச்சரியமான சந்திப்பு, இன்று இணையத்தில் வைரலாகி  வருகின்றது.

 எஸ்.பி.பியின்  இலங்கை ரகசிகர் திரு. மாரன் ஒரு வெடிப்பு சம்பவத்தில் கண்பார்வை இழந்துள்ள நிலையில்,  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இடம்பெற்ற நேர்காணலில் தனது இருள் நிறைந்த உலகில் எஸ்.பி.பியின்  பாடல்கள் தான் அவருக்கு ஆறுதலையும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் அளித்தாக தெரிவித்திருந்தார்.  

அத்துடன் எஸ்.பி.பியை சந்திப்பது தனது வாழ்நாள் கனவு எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, எஸ்.பி.பி மாரனுக்கு ஒரு ஆச்சரியமான சந்திப்பை மேற்கொண்டு அவரது கனவை நனவாக்கினார்.

இந்த நெகிழ்ச்சியான தருணம் காண்பவர் கண்களில் கண்ணீரை ஏற்படுத்துவதுடன் எஸ்.பி.பியின் மனித நேயத்தின் பிரதிபளிப்பாக உள்ளது. 

இந்நிலையில், இசை ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஓகஸ்ட் 5ஆம் திகதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் கொரோனாவிலிருந்து குணமடைந்த போதும், உடல் நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 1.04 மணிக்கு உயிரிழந்திருந்தார்.  

இதனையடுத்து, எஸ்பியின் உடலுக்கு இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அஞ்சலி இடம்பெற்று, நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.