தனது மதுரக் குரலால் கடந்த ஐந்து தசாப்தத்திற்கும் மேலாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை கட்டிப்போட்ட பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு அவரது ரசிகர்களின் நெஞ்சை ஒரு கணம் உறைய வைத்துள்ளது. 

தேன் சிந்தும் அவரது இனிய குரல்வளம் ஒவ்வொருவரது உணர்ச்சிகளுக்கும் விருந்தாக அமைந்தது என்றால் மிகையில்லை. 

இன்பத்தையும் துன்பத்தையும் தன் குரலால் மக்கள் மனங்களில் தீட்டிய ஒரு மாபெரும் கலைஞர் எஸ்.பி.பி.

இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் ஆறு முறை தேசிய விருது, மாநில விருதுகள் என வாங்கிகுவித்தவர்.   பாலா என்று திரையுலகில் கனிவாக அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் காலத்தால் அழியாத பாடல்களை தனது குரல்வளத்தால் அனைவர் இதயங்களிலும்  பாய்சியவர்.

அந்த பாடும் நிலா இன்று அனைவரையும் விட்டு மறைந்து விட்டது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என அனைவரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

 இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் தன் பாடல்களால் மக்கள் மனங்களில் உயிர் வாழ்ந்த மாபெரும் கலைஞன் மரணித்து விட்டான் என பிரதமர் மோடி உட்பட பலரும் தங்கள் அனுதாபச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பாடி இந்தியாவின் தலை சிறந்த பின்னணிப் பாடகராக திகழ்ந்தவர்.

 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். மேலும் ஒரே நாளில் இரு மொழிகளில் 21 பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். அனைத்து மொழிகளிலும் சரியாக உச்சரித்துப் பாடக் கூடிய ஒரே பின்னணிப் பாடகர் என்ற புகழுக்குரிய எஸ்.பி.பி. 54 ஆண்டு காலம்  திரை உலகில் கொடிகட்டிப் பறந்தவர்.

அவரது குரல் வளத்திற்கு சான்றாக அமர்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலையும் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் மண்ணில் இந்த காதல் இன்றி என்ற பாடலையும் மூச்சு விடாது பாடி தான் ஒரு வித்தியாசமானவன் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

அதுமாத்திரமன்றி, இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்ற இரு விருதுகளை பெற்றதன் மூலம் இசை உலகில் அவருக்கென தனி அங்கீகாரம் கிடைத்தது.

 இலங்கை ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர் எஸ்.பி.பி. 

மீண்டும் அவர் சுகமாக வீடு திரும்ப மாட்டாரா?  அந்த வசீகரனின் வசீகர குரல் மீண்டும் கேட்காதா? என அவரது ரசிகர்கள்  ஏங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த ஐம்பது நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் காலமானார் .

இன்று அவரது உடல் செங்குன்றம் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது  பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

மறைந்தும் மறையாதவராக எவ்வாறு கவியரசர் கண்ணதாசன் இன்றும் வாழ்கின்றாரோ அதேபோன்று  பாடும் நிலா எஸ்.பி .பாலசுப்ரமணியமும் இந்த தமிழ் கூறும் நல்லுலகம் நீடித்து நிலைக்கும் வரை மக்கள் நெஞ்சங்களில் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தார் சார்பிலும் ரசிகர்கள் சார்பிலும் நாமும் அந்தத் துயரில் பங்கு கொள்வோமாக.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்