மரண வீடொன்றிற்குச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று   இரவு புத்தளம் அநுராதபுரம் வீதியின் சிரம்பியடி பிரதேசத்தில் வைத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிந்தவல பிரதேசத்திலிருந்து புத்தளம் சாலியவெவ  பிரதேசத்திற்கு மரண வீடொன்றிற்குச் சென்றுவிட்டு நேற்று   இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வேனே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வேன் வீதியில் சென்று கொண்டிருந்த போது வீதியோரத்தில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள் திடீரென முன்னால் வந்து வேனின் முன்புறத்தினைத் தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றதாக சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர்கள் தெரிவித்தனர். 

இத்தாக்குதலில் காயத்திற்குள்ளான வேனின் சாரதியும் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த நபரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவார். 

இத்தாக்குதலினால் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேச வீதியில் காட்டு யானைகள் உலாவித் திரிவதானது மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் மக்கள் அடிக்கடி வீதிக்கருகில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இந்தக் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்படுவதாகவும், சில வேளைகளில் இந்த காட்டு யானைகள் பல மணி நேரங்களாக வீதியில் தரித்து நிற்பதால் வீதியில் பயணிக்கும் மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கும் உள்ளாகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.