இசை ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான நிலையில், அவரது உடல் இன்று சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமுலில் உள்ள நிலையில், இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், எஸ்பிபியின் உடலுக்கு இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை பொலிஸார் செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்தப்படி பொலிஸ் மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும், இதற்காக 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு பிறகு காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட வேண்டிய பணிகள் ஆரம்பித்து 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மண் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில்  மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.