(லியோ நிரோஷ தர்ஷன்)

அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டில் பிராந்திய ஒத்துழைப்புகளில் இலங்கையை வலுவாக இணைக்கும் வகையில் இந்திய பிரதமருடனான இன்றைய கலந்துரையாடல் அமையும். 

மேலும் கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனைய கூட்டு முயற்சி மற்றும் திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம் உட்பட ஏற்கனவே நிலுவையில் உள்ள இந்திய திட்டங்களின் முன்னேற்ற பாதைக்கு இந்த பேச்சு வார்த்தை முக்கியமானதாக அமையும் என டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு   இணையவழி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறக் கூடிய மிக முக்கிய சந்திப்பாக இதனை சுட்டிக்காட்டியுள்ள  கொழும்பு இராஜதந்திரிகள் , அரசியல் , பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பன்முக உறவினை மதிப்பாய்வு செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல் அமையும் என கூறபடுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போதே இந்த இணையவழி விரிவான உரையாடல் ஊடாக இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இரு நாட்டு பிரதமர்களும் இணங்கியிருந்தனர். 

எவ்வாறாயினும்  இன்றைய இணையவழி கலந்துரையாடல் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கின் முக்கிய அரசியல் பிரமுகர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது புதிய அரசியலமைப்பு , 13 ஆவது திருத்தம், மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மறுப்புறம் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மீனவர்களை அலரி மாளிகையில் சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது இந்திய மீனவர்களின் பிரச்சினை மற்றும் 2017 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட இழுவை மடி சட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருடன் இணைய வழி கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு முன்னர் தமிழர் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அந்த சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளமையானது இரு தரப்பு பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் அந்த சந்திப்புகள் அனைத்திலும் இலங்கை - இந்திய தொடர்புப்பட்ட விடயங்களே கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேபோன்று டெல்லியின் தகவல்களின் படி கொவிட்-19 உலக வைரஸ் தொற்றின் பின்னர் ஏற்பட்ட புதிய நிலைமைகளை கவனத்தில் கொண்டே இலங்கையுடனும் ஏனைய நட்பு நாடுகளுடனும்இந்திய செயற்பட்டு வருகின்றது. 

அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டில் பிராந்திய ஒத்துழைப்புகளில் இலங்கையை வலுவாக இணைக்கும் வகையிலும் இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை அமையும் என்பது முக்கியமானதாகும். 

மேலும் கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனைய கூட்டு முயற்சி மற்றும் திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரம் உட்பட ஏற்கனவே நிலுவையில் உள்ள இந்தியத் திட்டங்களின் முன்னேற்ற பாதைக்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக அமையும் எனவும் டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.