சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நிலையான துடுப்பாட்டத்தினால் 175 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று துபாயில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லிக்கு வழங்கினார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டத்துடனும், ஷிகர் தவான் 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ரிஷாத் பந்த் 37 ஓட்டத்துடனும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுக்களையும், சாம் கரன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photo Credit : ‍IPL