கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய விமான ஓடுபாதைகள் எதிர்வரும் வருட ஆரம்பகால 3 மாதங்கள் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ளது.

குறித்த விமான நிலையமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை காலை 8.30 இலிருந்து மாலை 4.30 வரையான காலப்பகுதியில் விமான பிரதான ஓடுபாதைகளை மூடவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து அதிகாரச் சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.சீ.நிமல்சிரி தெரிவித்தார். 

இதன்படி, இரவு வேளைகளில் மட்டும் விமானச் சேவைகள் இடம்பெறுவதுடன் மாற்றுச் செயற்பாடுகளுக்காக மத்தளை சர்வதேச விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் இது குறித்து விமானச் சேவைகளுக்கு தகவல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையகம் உதவி புரியும்  சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எம்.எச்.சீ.நிமல்சிரி மேலும் தெரிவித்தார்.