(எம்.மனோசித்ரா)

தேசிய குடும்ப கட்டுப்பாட்டு தினம் வருடாந்தம் செப்டெம்பர் 26 ஆம் திகதி உலக கருத்தடை தினத்துக்கு சமாந்தரமாக கொண்டாடப்படுகிறது.

இவ்வருடம் ' பிறப்புக்களிடையே சரியான இடைவெளியைப் பேணுவோம் - இன்பம் பொங்கும் இனிய குடும்பம் ' என்ற தொனிப்பொருளில் குடும்ப கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்படவுள்ளது.

அனைத்து திருமணமான தம்பதிகளினதும் கனவு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதாகும். தேசிய குடும்ப திட்டமிடல் திட்டத்தின் நோக்கம் சரியான பிறப்பு இடைவெளியுடன் விரும்பிய எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற தம்பதிகளுக்கு உதவுவதுடன் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க உதவுவதுமாகும் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

குடும்பத்திட்டமிடல் என்றால் என்ன?

குடும்ப திட்டமிடல் தனிநபர்கள் மற்றும் தம்பதிகள் தாம் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற மற்றும் அவற்றிற்கிடையிலான இடைவெளியையும் நேரத்தையும் தீர்மானிக்க உதவுகிறது. இதனை முறைமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின்மைக்கான சிகிச்சை பெறுவதன் மூலம் அடைய முடியும் என்று 2018 இல் உலக சுகாதார ஸ்தாபனம் வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

குடும்ப திட்டமிடலின் நோக்கங்கள்

குடும்பத்திட்டமிடலுக்கான முக்கிய காரணிகள் சில வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய கர்ப்பங்களுக்கு இடையில் சரியான இடைவெளி , தம்பதியர் விரும்பிய குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெறுதல் , பெற்றோரின் வயதுக்கு ஏற்ப குழந்தை எப்போது பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்தல் , தேவையற்ற கர்ப்பங்களைத் தடுத்தல் மற்றும் கருவுறாமை முகாமைத்துவம் - குழந்தை பிறக்காமைக்கான சிகிச்சை என்பனவே அவையாகும்.

குடும்ப கட்டுப்பாட்டின் முக்கியத்துவம்

குடும்ப கட்டுப்பாட்டின் முக்கிய காரணிகளில் பிரதானமானது தாய் மரணங்களின் அபாயத்தைக் குறைத்தல் காணப்படுகிறது. இலங்கையில் தடுக்கக் கூடிய தாய் மரணங்களில் மூன்றில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்படாத குடும்ப திட்டமிடலுக்கான தேவையினால் ஏற்படுகின்றன. கருத்தடை முறைமைகளின் பாவனை பரவல் வீதத்தின் அதிகரிப்பு தாய் மரணங்களை தவிர்க்கிறது என்பதை உலகளாவிய ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

குடும்ப கட்டுப்பாட்டின் ஏனைய முக்கிய விடயங்களாக சட்டவிரோதமான முறைமையிலான கருக்கலைப்புக்களைக் குறைத்தல் , சரியான பிறப்பு இடைவெளியை பேணுதல் மற்றும் நெருக்கமான இடைவெளியிலான பிறப்புக்கள் பெற்றோர் - குழந்தைகள் இருவருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு சிசு மரணம் , குழந்தை நோயுறல் அல்லது இறப்பு போன்வற்றுக்கும் வழிவகுக்கும்.

குடும்ப திட்டமிடலின் பிரதான பரிந்துரைகள்

இரு குழந்தைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளியைப் பேண வேண்டும். கருத்தரிப்பிற்கான உகந்த வயது 20 - 35 ஆகும். மேலும் நான்கிற்கும் மேற்பட்ட கருத்தரிப்புக்கள் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது.

இரு குழந்தை பிறப்புக்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணுவதன் அவசியம் குறித்து பெரும்பாலானோர் மத்தியில் கேள்விகள் எழக்கூடும்.

குறுகிய இடைவெளியுடனான பிறப்புக்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் அதே வேளை , கர்ப்பத்திற்கு இடையிலான இடைவெளி 24 மாதங்களுக்கும் குறைவாக இருக்கும் போது முதிர்வுக்கு முந்திய குழந்i பிறப்பு, எடை குறைவான பிறப்பு, குறைவான பாலூட்டும் காலம் , கருவிலிருக்கும் சிசு மரணம் மற்றும் சிசு மரணம் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது என்பவையே பிறப்புக்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணுவதன் அவசியமாகும்.