(நா.தனுஜா)

அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் ஜனநாயகத்தின் அடிப்படைகளையும் மக்களின் இறையாண்மையையும் முற்றிலும் தகர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், அது தனியொருவரின் கைகளில் மட்டுமீறிய அதிகாரங்களை வழங்குகின்றது. எனவே நாட்டிற்கு பாதகமான இந்தத் திருத்தத்திற்கு எதிராக இன, மத, கட்சிபேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நாட்டை வலுப்படுத்த பாதையமைக்கும் புத்திஜீவிகள் அமைப்பின் சார்பில் நாகானந்த கொடித்துவக்கு வலியுறுத்தினார்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இன்று கொழும்பிலுள்ள தேசிய புத்தகசாலையின் கேட்போர்கூடத்தில் ஒன்றிணைந்த தொழிற்சங்கவாதிகள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தின் ஊடாக ஏற்கனவே 19 வது திருத்தத்தில் காணப்பட்ட 35 ஆம் சரத்து நீக்கப்பட்டிருக்கிறது.

 இதன் விளைவாக ஜனாதிபதி நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டவராக மாற்றப்படுகின்றார். ஜனநாயக நாடொன்றைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியொருவருக்கு எதிராக வழக்குத்தொடரக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும்.

ஆனால் ஜனாதிபதி குற்றமிழைத்தாலும் கூட அவரை சட்டத்திற்கு முன்னால் சவாலுக்குட்படுத்த முடியாத நிலையேற்படுகின்றது  என அவர் இதன்போது தெரிவித்தார்.