ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 132  ஓட்டங்களை விளாசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல். ராகுல், அதிவேகமாக 2000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நேற்றைய தினம் நடைபெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 206  ஓட்டங்களை குவித்தது. 

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய  ஓட்டங்களை விளாசிய இந்திய வீரரானார். 

இதற்கு முன்னர் அதிகூடிய தனிநபர் ஓட்டத்தை பெற்ற இந்தியராக ரிஷாப் பாண்ட் (128) இருந்தார்.

மேலும், இந்த போட்டியின்போது ஐ.பி.எல். அரங்கில் இரண்டாயிரம் ஓட்டங்களை ராகுல் கடந்தார். 

60 இன்னிங்ஸ்களில்  2000 ஓட்டங்களை எடுத்து  அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரராக பதிவானார்.  

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களை குவித்து இந்த மைல் கல்லை எட்டிய இந்தியராக இருந்தார். தற்போது கே.எல். ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளார்.

ஐ.பி.எல். அரங்கில் கிறிஸ் கெய்ல் 43 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களை கடந்து  முதல் இடத்தில் உள்ளார்.