தென் கொரிய அதிகாரியொருவர் தமது கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இவ்வார தொடக்கத்தில் காணாமல்போன தென் கொரியாவின் மீன்வள அதிகாரியொருவரை வடகொரிய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக தென்கொரிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந் நிலையில் இது தொடர்பில் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் தென்கொரிய ஜனாதிபதிக்கு மூன் ஜே-க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மன்னிப்புக் கோரியுள்ளதுடன் இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வடகொரிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தென்கொரிய அதிகாரி செப்டம்பர் 21 அன்று யியோன்பியோங் தீவுகளுக்கு தெற்கே 1.9 கிலோமீட்டர் (1.2 மைல்) கடற்பரப்பில் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.