பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இகொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி சாவித்திரி,  மகன் சரண், மகள் பல்லவி, ஆகியோர்  உள்ளிட்ட குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எஸ்பிபி உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் கூறியபோது,

 ’எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறிகள்தான் இருந்தது. ஆனால் அதன்பின் எட்டாவது நாள் முதல் பனிரெண்டாவது நாள் வரை அவரது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதன் பின் அவருக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டன. 

அதன் பின்னர் அவர் வெண்டிலட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதன்பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதால் நுரையீரல் செய்யும் வேலையை செய்வதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருடைய உடலில் உள்ள மேலும் ஒருசில பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வைத்தியசாலை சுற்றி ஊடகவியலாளர்களும், ரசிகர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்  என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.