இந்த  நாட்டை ஆளவேண்டுமானால் அதற்கு சரியான ஆயுதம் இனவாதமே என்பது பிரதான எதிர்க் கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இன்று மாறியுள்ளது. 

ஆட்சியைக் கைப்பற்ற இரு கட்சிகளும் இதனையே கடைப்பிடித்து வருகின்றன. தேர்தல் காலங்களில் மாத்திரம் சிறுபான்மை  மக்களை அரவணைக்கும் வகையில் அவர்களுக்கு சாதகமான சில விடயங்களை கூறுவது உண்டு.

 

அதுவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு மலை ஏறிவிட்டது. இவ்வாறான ஓர் பின்னணியில் இந்த நாட்டின் சிறுபான்மை இனம் அடிமைகளைப்போன்று வாழ வேண்டிய சூழ்நிலையே இனி உருவாகும் என்பது பொதுவான அபிப்பிராயம்.

இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் சுய இலாபங்களை கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்களை  ஒரு சில சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் எள்ளி நகையாடும் பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

ஆளும் தரப்பிலும் சரி எதிர்த்தரப்பிலும் சரி இருக்கும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறப்படும் பலரும் இதனை கச்சிதமாக செய்து வருவதாக மக்கள் சர்வசாதாரணமாக விமர்சிக்கின்றனர்.

 இவற்றுக்கு மத்தியில் ஆளும் தரப்பினர் மத்தியிலும் எதிர்த்தரப்பினர் மத்தியிலும் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அனுபவமிக்க தேசிய தலைவர்கள் என்று கூறக்கூடிய ஒரு சிலர் இன்னும் யதார்த்தமாக சில கருத்துக்களை தயங்காமல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மிகவும் போற்றப்பட வேண்டியவர். அவர் தமிழ்பேசும் மக்கள் சார்பில் தயங்காமல் வெளிப்படையாக குரல் கொடுத்து வருபவர்.

அண்மைக்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இனவாதக் கருத்துக்களை கூறி வருவது தமிழ் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

 பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தொடக்கம் பலரும் இதனை கண்டித்துள்ளனர். ஆளும் தரப்பினை மிஞ்சும் அளவிற்கு எதிர்த்தரப்பு இனவாதத்தைக் கக்குவதாக கூறுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

எப்படியாவது பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தி தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள் என தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.  

இவ்வாறான பின்னணியில் முன்னாள் எதிர்க்கட்சியாக  இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்று, தற்போதைய எதிர்க்கட்சியும் இனவாதத்துடன் செயற்படுவது வருந்தத்தக்கது என்று மங்கள சமரவீர கூறியுள்ளார்.

 இலங்கைக்கு ஒரு மாற்றுப்  பார்வை தேவையாக உள்ளதே தவிர தற்போதைய அரசின் இனவாதம் மற்றும் பெரும்பான்மை வாதம் போன்ற கொள்கைகள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார் .

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மரிக்காரின் கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் தளத்தில் இந்த பதிவை இட்டுள்ளார்  .

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கடந்த புதன்கிழமை பாராளுமன்றிற்கு அணிந்துவந்த ஆடை  பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. 

அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில் இலங்கையின் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நகையாடியிருந்தார்.

அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே  இதனை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். 

முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் போன்று தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படுவது வருத்தமளிக்கிறது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 இலங்கைக்கு ஒரு மாற்றுப்பார்வையே அவசியமானதாக இருக்கின்றதே தவிர, தற்போதைய அரசாங்கத்தின் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்