ராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு

By Vishnu

24 Sep, 2020 | 09:29 PM
image

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுலின் அதிரடியான சதத்தின் துணையுடன் பஞ்சாப் அணி 206 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல்.லின் 6 ஆவது போட்டி இன்றைய தினம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பஞ்சாப்பிற்கு வழங்கியது.

அதன்படி பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ராகுலும், மாயங்க் அகர்வாலும் இருவம் களமிறங்கி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் அகர்வால், 6.6 ஆவது ஓவரில் சஹாலின் பந்து வீச்சில் 26 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, நிகோலஷ் பூரண் களமிறங்கினார்.

எனினும் அவர் 13.1 ஆவது ஓவரில் சிவம் டூப்பின் பந்து வீச்சில் டிவில்லியர்ஸுடம் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த மெக்ஸ்வெலும் நீண்ட நேரம் நிலைத்திருக்காது 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

4 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கருண் நாயருடன் கைகோர்த்த ராகுல் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்தார். இதனால் பஞ்சாப் அணி 18 ஓவர்களின் நிறைவில் 157 ஓட்டங்களை குவித்தது.

ராகுல் 90 ஓட்டங்களுடனும் கருண் நாயர் 8 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ராகுல் முதல் பந்தில் சிக்ஸரையும், அடுத்த பந்தில் பவுண்டரியையும் விளாசி மொத்தமாக 62 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக அதிரடியாக சதம் பெற்றார்.

விராட் கோலி 17 மற்றும் 18 ஆவது ஓவர்களில் ராகுலின் இரு பிடியெடுப்புகளை தவறவிட்டமையும் அவருக்கு சாதகமாக அமைந்தது.

19 ஆவது ஓவரை மொத்தமாக எதிர்கொண்ட ராகுல் அந்த ஓவரில் மாத்திரம் 26 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களை குவித்தது.

ராகுல் 69 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்களுடனும், கருண் நாயர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பெங்களூ அணி சார்பில் சிவம் டூப் 2 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right