காரைநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

காரைநகர் பகுதியில் உள்ள  பலசரக்கு கடையொன்றினை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது , பழுதடைந்த நெத்தலிக் கருவாடுகள் , மிளகு தூள் பொதிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. அத்துடன் கடை மிகுந்த சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டுள்ளது.

அதேவேளை 80 சதவீத எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 08 சுருட்டுக் கட்டுக்களும் மீட்கப்பட்டன.

அவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரால் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது , நீதவான், எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக சுருட்டினை வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் , சுகாதார சீர்கேட்டுடன் கடை இயங்கியமையால் காலவரையின்றி கடையினை மூடி சீல் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு  ஒத்திவைத்தார்.