(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் கொண்டுவந்த பிரேரணையால் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று புதன் கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து, சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பிரேரணை முன்னறிவித்தலாக, 2020 செப்டம்பர் 25ஆம் திகதி முதற்கொண்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும்வரை துறைசார் மேற்பார்வை குழு செயற்படுவதை இடைநிறுத்தும் பிரேரணையை சபைக்கு அறிவித்தார்.

இதன் போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை பாராளுமன்ற மேற்பார்வை குழுவில் ஆராய்து விசாரணை செய்யாமல் நேரடியாக அனுமதிக்கவே அரசாங்கம் துறைசார் மேற்பார்வை குழுவை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற ஜனநாயக விரோத இந்த தீர்மானத்தை அனுமதிக்கக்கூடாது.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், துறைசார் மேற்பார்வை குழு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மயன்த்த திஸாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றோம். அந்த நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ள நிலையில், அறிக்கை சமர்பிக்கும்வரை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை இடைநிறுத்தவேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சி தலைவர் பிரேரணையை சரியாக வாசிக்காமலே எதிர்ப்பு தெரிவிக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது, துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரையே இடைநிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றோம். 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தலாம். இதனை விளங்கிக்கொள்ளாமலே பிரச்சினைப்படுத்துகின்றார் என்றார்.

இதன்போது எழுந்த மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, துறைசார் மேற்பார்வை குழு தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டங்களில் ஆராய்ந்திருக்கின்றோம். அதன் நடவடிக்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றோம். அதில் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால் தற்போது துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனை தொடர்ந்து எழுந்த தினேஷ் குணவர்த்தன, இந்த விடயம்தொடர்பில் தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருக்காமல், சபையில் இதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் பிரேரணைக்கு சபை இணக்கமா என கேட்டபோது, ஆளும் கட்சி தனது பெரும்பான்மையை பயன்படுத்தி இணக்கம் தெரிவித்ததன் பிரகாரம் துறைசார் மேற்பார்வைக்குழு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.