மாத்தறை பொல்ஹேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பயணியொருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்க கூடுமென சந்தேகிக்கப்படும் ஹோட்டல் ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் அடங்கிய 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 ஆம் திகதி மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 15 பேர் கொண்ட ரஷ்ய குழுவினரில் ஒருவரே இந்த தொற்றாளர் என சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

இன்று சீனாவுக்கு புறப்படவிருந்த குழுவினர் நேற்று பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர், இந்த பரிசோதனையின்போதே ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழு உறுப்பினருடன் வசித்து வந்த 04 ரஷ்யர்கள் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள இரண்டு சூப்பர் மார்க்கட்களுக்கு விஜயம் செய்ததாகவும் பி.எச்.ஐ அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதன் விளைவாக, ஹோட்டலில் பணியாளர்கள், வீடு திரும்பிய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.