13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் ஆறாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளது.

பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி டெல்லி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

அந்த ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து 2 விக்கெட் சரிந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது. 

பின்னர் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இது இவ்வாறிருக்க வெற்றிக்கணக்கை தொடங்கும் வேட்கையில் பஞ்சாப் அணி இன்று உள்ளது. 

இன்றைய ஆட்டத்திலும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 10 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

தேவ்தத் படிக்கல், டிவில்லியர்சின் அரைசதங்களும், யுஸ்வேந்திர சாஹலின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு வித்திட்டன. 

இதனால் புத்துணர்ச்சி அடைந்துள்ள விராட் கோலி படை 2 ஆவது வெற்றியினை இலக்கு வைத்துள்ளது. இரு அணிகளும் நல்ல நிலையில் இருப்பதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மொத்தம் 24 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன.

இப் போட்டியில் 74 ஓட்டங்களை விராட் கோலி பெற்றால் ஐ.பி.எல்.லில் 5,500 ஓட்டங்களை பூர்த்தி செய்வார்.  அதேநேரம் டிவில்லியர்ஸுக்கு 4,500 ஓட்டங்களை பெற இன்னும் 54 ஓட்டங்கள் மாத்திரம் தேவை எனும் நிலையும் உள்ளது.

இதேவேளை டேல் ஸ்டெய்ன் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினால் ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.