(இராஜதுரை ஹஷான்)

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் எவரையும்  நம்பி வாழாமல் சுயமாக தொழில் செய்து வாழ வேண்டும் என்ற மனநிலையிலும்  தனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும் என்ற  உறுதியுடன் வாழும் துசித்த ஏனைய  மாற்றுத்திறனாளிகளுக்கும், தவறான வழியில் தொழில் செய்பவர்களுக்கும் ஒரு  எடுத்துக்காட்டு.

கொழும்பு - 13  ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகிலுள்ள ஜம்பட்டா ஒழுங்கையில் காளி கோயிலுக்கு அருகாமையில் துசித்த சைக்கிள் திருத்தும் கடையில் தொழில் புரிகிறார். அவருடன் சகஜமாக உரையாடுகையில்.

 

துசித்த

'இப்போது எனக்கு 42  வயதாகிறது.  28 வயதிலிருந்து சைக்கிள் திருத்தும் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றேன். சரியான வேளையில் போலியோ தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளாமையாலேயே தனக்கு இந்த நிலை ஏற்பட்டது. பிறந்து 7 மாதங்களில் அந்தத் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எனது பெற்றோருக்கு போதிய விளக்கம் இல்லாததால் போடத் தேவையில்லை என்று நினைத்திருப்பார்கள்.  என  பிறருக்கு ஆறுதல் பட தன்னுடைய நிலைமையை கூறினார்.

போலியோ பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தனது இருகால்களும் வளர்ச்சி குன்றிய நிலையிலும் தனது 14 வயது முதல் தொழில் செய்து உழைத்து தனது தேவைகளை நிறைவேற்றி வருவதுடன், தான் வாழும் சமூகத்துக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றார். 

'எனக்கு யாரையும் தங்கி வாழ்வதில் விருப்பம் இல்லை. அதனாலேயே இத்தொழிலுக்கு வந்தேன். 14 வயதில் தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்தேன். பின்னர் அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை செய்தேன். புறக்கோட்டையில் பைகள் விற்றேன். அதன் பிறகே இத்தொழிலை ஆரம்பித்தேன் என்று கூறும் துசித்த இவ்வாறு தொடர்ந்து பல்வேறு தொழில்களைச் செய்து உழைத்து இன்று தனக்கென சொந்தத் தொழிலை தேடிக் கொண்டதில் பெருமிதம் கொள்கின்றார்.

'தற்போது நான் என்னுடைய போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சைக்கிளை தயாரித்தவரிடம் சென்ற போது இந்தத் தொழிலை நானும் செய்ய வேண்டுமென்று ஆர்வம் வந்தது. அந்த சைக்கிள் திருத்தம் செய்பவரிடமே இத்தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு கேட்டேன். அவர் வேலை இல்லாத நேரங்களில் வரக்கூறினார். 

அதன் பின்னர் 8 வருடங்களாக அவரிடம் வேலை செய்தேன். கொஞ்ச காலத்துக்கு சம்பளம் தரவில்லை. சாப்பாடு, தேநீர்தந்தார்கள். 

இவ்வாறு தனது குறைபாட்டினை மற்றவர்களின் கருணையாக மாற்றி பணம் பெறும் நடவடிக்கையை இவர் மேற்கொள்ளவில்லை. ஒன்றுக்குப்பல தொழில்களைக் கற்று இறுதியாக சைக்கிள் திருத்தும் கடையினை நிரந்தரமாக்கியிருக்கின்றார். 

இந்த சைக்கிள் திருத்தும் தொழில் மூலம் போதிய வருமானம் பெற்றுக் கொள்ள முடிக்கின்றதா என வினவிய போது..

சிலர் சைக்கிளை திருத்த கொண்டு வருவார்கள். ஆனால் அதை திரும்பப் பெறமாட்டார்கள். அதனை திருத்தி விற்பனை செய்வேன்.

சிலர் சொந்தமாக வைத்து கொள்ளச் சொல்லியே கொடுத்துச் செல்வார்கள். இந்த தொழில் செய்து எந்த குறைபாடுகளும் இன்றி வாழ்கின்றேன். இந்த இடம் எனக்கு சொந்தமில்லை. நாளைக்கு என்னைப் போகச் சொன்னால் போக வேண்டும். யாராவது தொழிலை செய்ய சொந்த இடம் தருவார்களென்றால் ஏற்றுக் கொள்வேன். கூடாரம் ஒன்று அமைத்துக் கொடுத்தாலும் சந்தோஷப்படுவேன்.

 

மாற்றுத்திறனாளிகள் சாதனை படைப்பதை  திரைப்படங்கள், செய்திகள் ஊடாகவே நாம் அறிகின்றோம். ஆனால்  துசித்தவின் கதை  பல விடயங்களை உறுதிப்படுத்தியது. சாதனை படைப்பதற்கும், கௌரவமாக வாழ்வதற்கும்    உடல் அங்க குறைப்பாடுகள் ஒரு பொருட்டல்ல  என்பதை  பேச்சளவில் அல்லாமல், செயலளவில்  துசித்த    செயற்படுத்தி காண்பித்துள்ளார்.