போதைப்பொருள் கடத்தல் மூலமாக பெறப்பட்ட 31 கோடி ரூபா பணத்தை வங்கிக்கணக்குகளில் வைத்திருந்தது தொடர்பில் நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான நீர்கொழும்பு நகர சபை ஊழியரின் வங்கிக் கணக்கில்18 கோடி ரூபா பணமும், வாகன பாகங்கள் விற்பனையாளரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபா பணமும் மற்றைய சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 8 கோடி ரூபா பணமும் வைப்பிலிடப்பட்டிருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

துபாய் மற்றும் இத்தாலியில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் இமோ என்ற சமூக வலைத்தளத்தின் ஊடாக அங்கிருந்தபடியே இரகசிய ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். பல நபர்களின் தகவல்களை இமோ ஊடாக பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மூலம் போதைப்பொருளை விநியோகித்துள்ளனர். இந்த போதைப்பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்ட பணம் இங்குள்ள சந்தேக நபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.