விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதன்கிழமை அவிசாவளை - நாப்பாவல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு துப்பாக்கி 1, வெவ்வேறு வகை துப்பாக்கி ரவைகள் 85, பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகள் 27 மற்றும் கைவிலங்கு ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் குடகம பகுதியில் வைத்து துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து மைக்ரோ ரக வெளிநாட்டு துப்பாக்கி 1 மற்றும் அதன்  ரவைகள் 6 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குடகம மற்றும் நாப்பாவல பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதான நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிவடுன்ன வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்த துப்பாக்கி மற்றும் அதன் 4 ரவைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.