அமெரிக்க மருந்து நிறுவனமான ஜோன்சன் அன் ஜோன்சனின் ஒரு முறை செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை நேற்று (23.09.2020) தொடங்கியது.

ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

விலங்கு மற்றும் மனித பரிசோதனைகள் ஆகிய இரண்டிலும் பாதுகாப்பான முறையில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தன. 

இந்நிலையில் இறுதி கட்ட சோதனையை நிறுவனம் புதனன்று தொடங்கியது. 

அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகிய நாடுகளில் 200 க்கும் மேற்பட்ட தளங்களில் சுமார் 60 ஆயிரம் நபர்களிடம் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறும் என அந்நிறுவன தலைமை விஞ்ஞானி வைத்தியர் பால் ஸ்டோபெல்ஸ் தெரிவித்துள்ளார்

இதுவரை உலகின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுகளில் ஒன்றாக இது இருக்கும்.

மாடர்னா, பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா போன்ற போட்டி தடுப்பூசிகள் அனைத்தும் குறிப்பிட்ட வாரங்களுக்கு இடையே இரண்டு முறையாக செலுத்தப்பட வேண்டும். 

ஆனால் ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசி ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அந்நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் இதனை எளிதாக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்கின்றனர்.

மூன்றாம் கட்ட ஆய்வு நெறிமுறைகளை ஜோன்சன் அன் ஜோன்சன் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மைக்காக இவ்வாறு செய்துள்ளனர். 

தற்போது தொடங்கியுள்ள மூன்றாம் கட்ட சோதனை இந்தாண்டு இறுதியில் முடிவடையும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 1 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்து உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டுவிட்டரில்,

பெரிய செய்தி. பல பெரிய நிறுவனங்கள் அருமையான முடிவுகளைக் காண்கின்றன. கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.