இலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறிப்பாக அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், நீதித்துறையின் பக்கச்சார்பின்மைக்கும் சுயாதீன தன்மைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுநலவாயத்தை சார்ந்த நான்கு அமைப்புகள் ஆழ்ந்த கவலை வெளியிட்டு அறிக்கையொன்றினை விடுத்திருக்கின்றன.

பொதுநலவாய உச்சி மாநாடு இலண்டனில் ஆரம்பம் | தினகரன்

இந்த அமைப்புகள் நீதித்துறையுடனும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடனும் தொடர்புபட்ட விவகாரங்களில் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து முக்கிய கவனத்தை செலுத்தி கருத்து வெளியிட்டிருக்கின்றன.

பொதுநலவாய மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் நீதிபதிகள் சங்கம், பொதுநலவாயத்தின் சட்டக்கல்வி சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளே நீதிபதிகளுக்கான நீதிபதிகள் என்ற அமைப்புடன் சேர்ந்தே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான உறவுமுறை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான பொதுநலவாய (லற்றிமார் ஹவுஸ்) கோட்பாடுகளையும் பொதுநலவாய சாசனத்தையும் அடியொற்றி நடப்பதாக இலங்கை அரசாங்கத்தினால் விசேடமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதும் நேர்மையானதும் தகுதிவாய்ந்ததுமான நீதித்துறை சட்டத்தின் ஆட்சியை உறுதியாக கடைபிடிப்பதற்கும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நீதியை வழங்குவதற்குமான செயன்முறைகளின் முழுமைக்கு முக்கியமானவையாகும். தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரமாணங்களினதும் பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட செயன்முறைகளினதும் ஆதாரத்தின் மீதான தகுதியின் அடிப்படையில் சகல மட்டங்களிலுமான நீதித்துறை நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே பொதுநலவாய சாசனத்தின் நான்காவது கோட்பாடாகும்.

நியமன செயன்முறை (உகந்த முறையில் அமைக்கப்பட்டு நிறைவான வகைமாதிரி பிரதிநிதித்துவத்தை கொண்ட நீதிச்சேவை ஆணைக்குழுவையும் சம்பந்தப்படுத்தியதோ இல்லையோ) சகல மட்டங்களிலும் நியமனத்துக்காக தெரிவு செய்யப்படுபவர்களின் தரத்தையும் சுயாதீனத்தையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் வகுக்கப்பட வேண்டும். 2017அக்டோபரில் பஹாமாஸின் நாசோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுநலவாய சட்ட அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிச்சேவைகள் ஆணைக்குழுக்கள் தொடர்பான வகைமாதிரி சட்டம், நீதிபதிகள் சட்டத்துறைசார் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாமர உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சுயாதீனமான நீதிச்சேவைகள் ஆணைக்குழு சுயாதீனமான நியமன செயன்முறையொன்றினூடாக உருவாக்கப்பட வேண்டும் என்று விதந்துரைக்கிறது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது நியமிக்கப்படுபவர்களை உள்ளடக்கியதான பாராளுமன்ற பேரவை (சரத்து 41A) சுயாதீன அமைப்பொன்றின் மெய்க்கருத்துக்கு எந்தவகையிலும் இசைவானதாக இல்லை.

மேலும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் 107ஆம், 109ஆம், 111ஆம் சரத்துக்களின் ஏற்பாடுகள் நீதித்துறையின் எந்தவொரு சிரேஷ்ட நியமனத்தையும் பாராளுமன்ற பேரவையின் பிரத்தியேகமான அங்கீகாரம் அல்லது ஆலோசனை இன்றி இலங்கை ஜனாதிபதி செய்வதற்கு அதிகாரங்களை வழங்குகிறது. பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதி பாராளுமன்ற பேரவையின் அவதானிப்புகளை மாத்திரமே பெற வேண்டிய தேவை இருக்கிறது. இது பொதுநலவாய (லற்றிமார் ஹவுஸ்) கோட்பாடுகளுக்கும் சுயாதீனமான நீதித்துறை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் அதிகார வேறாக்கலின் மெய்க் கருத்துக்கும் பொதுநலவாய சாசனத்துக்கும் முரணானதாக அமைகிறது. 

நியமனங்களை பொறுத்தவரை அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை கட்டாயப்படுத்துவதன் மூலமாக தேசிய கருத்தொருமிப்புக்கான ஒரு ஏற்பாட்டை தற்போதைய அரசியலமைப்பு கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு பேரவைக்கு பாராளுமன்ற சபாநாயகர் தலைமை தாங்குகிறார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற சிறிய அரசியல் கட்சிகளினால் நியமிக்கப்படுகின்ற இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உள்ளடக்கியிருக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் வகிக்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமரினாலும் எதிர்க்கட்சித் தலைவரினாலும் கூட்டாக நியமிக்கப்படுகின்ற – அரசியலில் சம்பந்தப்படாத மூன்று முன்னணி பிரஜைகளையும் கொண்டிருக்கிறது. இந்த மூவரையும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நியமிக்கும்போது சமூக பல்வகைமை மற்றும் துறைசார் நிபுணத்துவம் உட்பட இலங்கை சமூகத்தின் பன்முகத்தன்மையை அரசியலமைப்பு பேரவை பிரதிபலிப்பதை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதித்துறை நியமனங்களை செய்யும் ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் பதவிநீக்கம் செய்யும்போது அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டையும் தற்போதைய அரசியலமைப்பு கொண்டிருக்கிறது. தற்போது 20ஆவது திருத்த சட்டமூலத்தின் நோக்கம் இந்த ஏற்பாடுகளை இல்லாதொழித்து இலங்கையின் நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் கீழ்பட்ட நிலைக்கு நீதித்துறையை கொண்டு செல்வதாக அமைகிறது. இது சட்டத்தின் ஆட்சிக்கும் அதிகாரங்கள் வேறாக்கல் கோட்பாடுகளின் அடிப்படை கூறுகளுக்கும் முரணானதாகும்.

அதனால் நாம் உத்தேச அரசியலமைப்பு மாற்றங்கள் பொதுநலவாய அடிப்படை விழுமியங்களுக்கும் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அதிகாரங்கள் வேறாக்கல் ஆகியவை தொடர்பான சர்வதேச தராதரங்களுக்கும் இசைவான முறையில் அமைவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை நிறைவேற்று அதிகார பீடத்தையும் பாராளுமன்றத்தையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.