( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த சட்டமூலத்தினை சவாலுக்குட்படுத்தி ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால்,  அதனை நிறைவேற்ற வேண்டுமானால்  பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி இன்று மாலை வரை 6 தரப்புக்கள் உயர் நீதிமன்றில் விஷேட மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கால்லகே,  அனில் காரியவசம்,  இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளர்  பாக்கியசோதி சரவணமுத்து  ஆகிய தரப்புக்களால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.