பேருவல, மத்துகம மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மற்றும் கஞ்சா சுருட்டு தயாரிப்பதற்கான சிகரெட் 35 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடலிகம பகுதியில் வசிக்கும் 31 வயதான குறித்த முன்னாள் இராணுவ வீரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீண்ட காலமாக களுத்துறை மாவட்டத்தின் பல பாடசாலைகள் மற்றும் மாலைநேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் மாலைநேர வகுப்புக்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நபர்களுடன் இணைந்து சந்தேக நபரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 10 மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு கஞ்சா பக்கட் ஒன்று 3000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவரிடம் கஞ்சா கொள்வனவு செய்த வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.