(லியோ நிரோஷ தர்ஷன்)

உலக அமைதியையும் சமாதானத்தை விரும்பும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையாக போராட வேண்டியதுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கம் மற்றும் போலி செய்திகள் என்பன அனைத்துலக செயற்பாடுகளையும் முற்றாக ஸ்தம்பிக்க செய்கிறது. எனவே புதிய உத்வேகத்துடன் மீண்டும் அனைத்துலக ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டிய தருணம் இதுவென தென் கொரிய பிரதமர் சுங் சை-கியூன் தெரிவித்தார்.  

உலக வைரஸ் தொற்று காரணமாக  ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறான நெருக்கடியான நிலையிலும்  உலக ஊடகவியலாளர் மாநாட்டை  இணையம் ஊடாக ஏற்பாடு செய்துள்ள கொரிய ஊடக சங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுக்குறியதாகவே அமைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அனைத்துலக ஊடகவியலாளர் மாநாடு - 2020 கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் இணைய வழியாக மூன்று நாட்கள் இடம்பெற்றன. இதில் சுமார் 60 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து 90 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர். கொவிட் - 19 உலக தாக்கம் , போலி செய்திகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் கடப்பாடு உலக அமைதி மற்றும் தென் - வட கொரிய சமாதான மூலோபாயம் ஆகிய கருப்பொருள்களின் கீழ் சொற்பொழிவுகளும் விவதாங்களும் இடம்பெற்றன. 

மறுப்புறம் கொரிய போரின் 70 ஆவது ஆண்டு நிறைவு இதன் போது நினைவுக்கூறப்பட்டது. போர் அர்த்தமற்ற உயிர் இழப்புகளையும் அழிவுகளையுமே உலகிற்கு தந்துள்ளது.  எனவே உலக அமைதியை நேசிக்கும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் மற்றுமொரு உலக போர் வருவதை அங்கிகரிக்க கூடாது என்பதை அனைத்துலக ஊடகவியலாளர்கள் வலியுறுத்தினார்.  

1950 இல் இடம்பெற்ற போரின் பின்னர் , வடக்கு மற்றும் தென் கொரியாவை இணைக்கும் திட்டங்களில் தென் கொரியா கூடுதலான ஈடுப்பாடுடன் செயற்பட்டு வந்தது.  ஆனால் அநாவசியமான சில நாடுகளின்  மத்தியஸ்தம் மற்றும் தலையீடுகள் சமாதான பேச்சுக்களை சீர்குழைத்தது. இதனால் வட - தென் பிளவு இன்றுவரை நிரந்தரமாகியுள்ளது. 

2000 ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் வட கொரியாவுடன் ஸ்நேகமாகி விட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தென் கொரியாவின் அணுகு முறைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த முயற்சிகளின் சிறந்ததொரு பலனாகவே 2018 ஆம் ஆண்டின்  இரு கொரியாவின் தலைவர்களும் சந்தித்து பேச கூடியதாக இருந்தது என்று தெரிவித்த பேச்சாளர்கள், நிலையான சமாதானத்தை நோக்கிய தென் கொரியாவின்அணுகுமுறைகள் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.