(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் அதிகாரங்களை குறைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 20ஆவது திருத்தத்தில் திருத்தங்கள் தேவை என்றால் அதுதொடர்பில் கலந்துரையாட நாங்கள் தயார். அத்துடன் 20ஐ நிறைவேற்றிக்கொள்ள எதிர்க்கட்சியில் இருந்து 20பேரை அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்வோம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

20ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் அதனை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கு எதிர்ப்பு இருக்குமானால் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்குட்படுத்த காலம் வழங்கப்படுகின்றது.

அதேபோன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றிருந்தால் எதிர்க்கட்சி பிரதமருக்கு அதுதொடர்பான திருத்தங்களை கையளித்தால் அதுதொடர்பில் கலந்துரையாட நாங்கள் தயார். யாருக்கேனும் பாதிப்பான விடயம் இருக்குமாக இருந்தால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

மேலும் 20ஆவது திருத்தத்தில் பிரதமரின் அதிகாரங்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது. யாருடைய அதிகாரங்களை நீக்கினாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் அதிகாரங்களை நீக்க முடியாது. அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் போட்டியிட முடியாதவாறே 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து வேலை செய்ய முடியாததனாலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கு வழங்க நடவடிக்கை எடுத்தீர்கள்.

அதனால் 19ஐ இல்லாமலாக்கவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கின்றனர். அதனால் நாட்டுக்கு பாதகமான எந்த திருத்தத்தையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

அத்துடன் 20ஆவது திருத்த சட்டமூலம் சமர்ப்பித்ததற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கின்றபோதும், அதனை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் 54பேரில் 17 அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க இருக்கின்றனர். ஆனால் இருவதாவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் அங்கிகரித்துக்கொள்ள எதிர்க்கட்சியில் இருந்து நாங்கள் 20பேரை எடுப்போம் என்றார்.