(இராஜதுரை ஹஷான்)

 எதிர் தரப்பினரது ஆதரவின்றி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

20 ஆவது சட்ட மூலத்துக்கு மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என சட்டமாதிபர் சான்று வழங்கிய பின்னரே சட்ட மூலவரைபு அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்றது.

ஆகவே சட்ட ரீதியில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது என  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் பல குறைப்பாடுகளை கொண்டுள்ளது என, நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினேன். 

ஒரு வார காலத்திற்குள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அக்கிராசன உரையில் வாக்குறுதி வழங்கினார். 

இவரது வாக்குறுதியை நம்பி அனைவரும் அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். 

இத்திருத்தத்தினால் எதிர்காலத்தில் முத்துறையினருக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகளை முன்கூட்டி உணர்ந்து 19 ஆவது திருத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய திருத்தத்தை தற்காலிக ஏற்பாடாக கொண்டு வருவதுடன் நாட்டுக்கு பொருந்தும் அரசியலமைப்பினையும் உருவாக்குவதாக நாட்டு மக்களிடம் பிரதான இரண்டு தேர்தல்களின் போது வாக்குறுதி வழங்கினோம்.  

பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றதுடன். 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

 அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பிலான சட்ட மூல வரைபை சட்டமாதிபர் திணைக்களம் முழுமையாக பரிசீலனை செய்தது. 

மக்கள் வாக்ககெடுப்புக்கு செல்ல வேண்டிய எவ்வித ஏற்பாடுகளும் மூலவரைபில் குறிப்பிடப்படவில்லை. அதனால் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை. 

இருப்பினும் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என  சட்டமாதிபர் குறிப்பிட்டதன் பின்னரே திருத்தம் அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டது.

 20 ஆவது திருத்தம் குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். 

பாராளுமன்றில் எதிர்தரப்பினரது ஆதரவு இல்லாமலே எம்மால் திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.  இலங்கை பிரஜைகள் எவரும் திருத்தத்தை  சவாலுக்குட்படுத்தலாம். அனைத்து சட்ட சவால்களையும் வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.