20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நேற்று  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தை வாசித்ததன் பின்னர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

 அழிவுக்கு கொண்டு செல்லும் 20 வேண்டாம் என்ற பதாகைகளையும்  "வினாஷகாரி 20 எபா" அதாவது நாசத்தை ஏற்படுத்தும் 20 வேண்டாம் என்ற சிங்கள வாக்கியம் தாங்கிய சின்னத்தையும் தமது உடைகளில் பொறித்திருந்தனர்.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இன்றைய நாள் இலங்கையின் கறுப்புப் புள்ளியாக பதிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

20 ஆவது திருத்தம் தேசத்துரோகம். அரசாங்கம் அதனை வாபஸ்பெற்றுக்கொண்டு அனைவரும் கலந்துரையாடி ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். அத்துடன் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய பிரதமரினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை எங்கே என கேட்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.  

அத்துடன் பாராளுமன்றத்தின் கெளரவத்தை சீரழிக்கும் வகையிலே 20 ஆவது திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

19 ஆவது திருத்தத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் இதன்மூலம் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக்தை நேசிப்பவர்கள் எவரும் இதற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களை குறைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 20 ஆவது திருத்தத்தில் திருத்தங்கள் தேவை என்றால் அதுதொடர்பில் கலந்துரையாட நாங்கள் தயார். அத்துடன் 20 ஐ நிறைவேற்றிக்கொள்ள எதிர்க்கட்சியில் இருந்து 20 பேரை அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்வோம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மறு புறம் தெரிவித்துள்ள்ளார்.

இவ்வாறு ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் முட்டி மோதிவருகின்றன. தற்போது தோன்றியுள்ள நிலை யாருக்கு ஆட்சி அதிகாரம் என்ற ஓர் போட்டி நிலைமையை தோற்று வித்துள்ளது போன்றதோர்  தோற்றப்பாட்டையே காணமுடிகின்றது. இது அரசியலில் எதுவும் சாத்தியம் என்று மாத்திரம் தற்போதைக்கு எண்ணத்தோன்றுகிறது.  அத்தோடு அரசியல்வாதிகள் கட்சிதாவ மற்றும் குளிர்காய இப்போதைக்கு இது போதும். எதற்கும் சற்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்