பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

“ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் உருட்டுக் கட்டைகள், கத்திகளுடன் உள்நுழைந்த இருவர், அவரையும் அவரது மணைவியாரையும் அச்சுறுத்தியுள்ளனர். மணைவி அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்க நகைகளை அபகரித்த கொள்ளையர்கள், உயிர் அச்சுறுத்தலையும் விடுத்துத் தப்பித்துள்ளனர்.

“நாங்கள் 10 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ளோம். இங்கு வந்து கொள்ளையிட்டதை பொலிஸிடம் கூறினால் தேடி வந்து கொலை செய்வோம். எவருக்குமே தெரியக்கூடாது” என்று கொள்ளையர்கள் இருவரும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஓய்வுபெற்ற அதிபர், அச்சம் காரணமாக இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதைத் தவிர்த்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீர, தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் பிரிவிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் காங்கேசன்துறை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த 19, 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட இரண்டரைப் பவுண் தங்க நகைகளும் 720 மில்லிக்கிராம் ஹெரோயினும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.