அம்பலாங்கொடை பிரதான பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை பலப்பிட்டிய குறுக்கு சந்தை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலப்பிட்டிய - பாத்தேகம பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவன் கடந்த வருடம் கல்வி பொதுத்தராதர  சாதாரண தரப்பரீசைக்குத் தோற்றி 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்குத் தோற்ற தயாராக இருந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ள நிலையில் தேடப்பட்டு வந்ததாகவும் பெற்றோர் பொலிஸாரில் இது குறித்து முறைப்பாடு அளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.