(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் பொருளாதாரத்தை பலாத்காரமாக செயற்படுத்தவே நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முதலாவது பாதிக்கப்படப்போவது ஆளுங்கட்சியாகும்.

அத்துடன் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பவர்கள் பிற்காலத்தில் கைசேதப்பட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவார்கள் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜேஆரின் 78ஆவது அரசியலமைப்பின் கொடூரத்தை மக்கள் உணர்ந்துகொண்டதால்தான், பின்னர் வந்த தலைவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து தேர்தல்களில் வெற்றிபெற்றனர்.ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அந்த பின்னணியிலே 17ஆவது திருத்தத்தை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி அப்போது இருந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது. அதன் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஓர் அளவு குறைக்க முடியுமாகியது.

ஆனால் அது நீண்ட காலம் செல்ல முன்னரே 18ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதும் 17க்கு ஆதரவளித்த அனைவரும் 18ஆம் திருத்தத்துக்கும் கை உயர்த்தினார்கள். ஆனால் 18ஆம் திருத்தத்தில் இருக்கும் ஜனநாயக விராரோதமான விடயங்களை உணர்ந்து, அதற்கு ஆதரவளித்தவர்கள் பின்னர் கைசேதப்பட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினர். 

அதேபோன்றே 19ஆம் திருத்தம் வந்தபோதும் அதற்கு ஆதரவளித்தவர்கள் தற்போது 20ஆம் திருத்தம் தேவை என கூச்சலிடுகின்றனர். இன்று 20 தேவை என்று கூச்சலிடுபவர்கள் இன்னும் சில காலத்தில் அதன் பயங்கரத்தை உணர்ந்து, மக்களிடம் மன்னிப்பு கோருவார்கள். 20ஆவது திருத்தம் நாட்டின் பொருளாதாரத்தை பலாத்காரமாக செயற்படுத்துவதற்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.