கொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த பொலிஸாரால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கிரிபத்கொட - ஹூனுப்பிட்டிய வீதி, எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது  230 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரண வத்த, மாபோல - வத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்கிஸ்ஸ - ஹலுதாகொட குறுக்குத்தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், நுகேகொட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில்  ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. கனந்தபார - மிரிஹான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் நுக வீதி,  90 ஆம் தோட்டத்திற்கு திரும்பும் பகுதியில் வைத்து 5 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன்ஒருவர் கைது செய்யப்பட்டார்.  பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.