(செ.தேன்மொழி)
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவருக்குரிய பொறுப்புகளை மறந்து ஆளும் தரப்பினருக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன குற்றஞ்சாட்டினார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் முதலாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதன்போது பாராளுமன்றத்தில் முறையற்று செயற்பட்ட ஆளும் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே சபாநாயகர் செயற்பட்டதாகவும், இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாரபட்சம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் முதலாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அந்த திருத்தத்தில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகளை கருத்திற் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எமக்கு எதிராக கடுந்தொனியில் கூச்சலும் இட்டனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உரையின் போதும் ஆளும் தரப்பினர் அவரது கருத்தை முழுமையாக கூறவிடாது இடையூறு விளைவித்தனர்.

திருத்தத்திற்கு எதிராக நாங்கள் கருத்துக்களை முன்வைத்த போது அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நபர்களின் முகங்களை காண்பிக்காமல் வெறுமனே அவர்களது பேச்சுகளை மாத்திரமே பதிவுச் செய்துள்ளனர். இதுவே ஊடகங்களில் செய்தியாக வெளிவரும். இந்த செயற்பாடுகள் இடம்பெறும் போது சபாநாயகர் அமைதியாகவே இருந்தார். அவர் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஆலோசனைக்கமைய அவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கத்திலேயே செயற்பட்டு வருகின்றார் என்பதை உணர்த்தும் வகையிலேயே இவரது செயற்பாடுகள் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாராளுமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை குறைவாக மதிப்பிட்டே அதன் அதிகாரங்களை அரசாங்கம் நீக்க முயற்சித்து வருகின்றது. இதவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் , அரசியலமைப்பு பேரவை போன்றவற்றை நீக்குவதன் ஊடாக அரசாங்கம் எதனை எதிர்ப்பார்க்கின்றது? எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவதுடன் , பாராளுமன்றத்திற்குள் மாத்திரமின்றி வெளியிலும் தெளிவுப்படுத்தல்களை செய்வதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.