நுகேகொட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிலோவுக்கும் அதிக தொகை கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 2 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முணமலேவத்த - கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.