(எம்.மனோசித்ரா)
இலங்கையின் பாரம்பரியம், உள்ளூர் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் ஆர்வமுள்ள உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக அரசாங்கம் அதனை கைவிட்டமையால் உகந்த பராமரிப்பு இன்றி காணப்பட்ட கோட்டை மிதக்கும் கடைத்தொகுதியை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது 2014 ஓகஸ்ட் 25 திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் கடைத்தொகுதியின் புதுப்பித்தல் பணிகள் சுமார் 4 வருடங்களின் பின்னர் அதே தினத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உகந்த பராமரிப்பு இன்மை காரணமாக மிதக்கும் கடைத்தொகுதியில்  உள்ள பல கடைகள்  மூடிக் கிடந்தன. சுமார் 80 சதவீத கடைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் மிதக்கும் கடைகள் அமைந்துள்ள ஆறு மாசடைந்துள்ளமை சமீப காலங்களில் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிதக்கும் கடைத்தொகுதி வளாகம் நாட்டின் பாரம்பரியம், உள்ளூர் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டுள்ளது.

உகந்த பராமரிப்பு மற்றும் கடை உரிமையாளர்கள் பலர் கடைகளை மூட வேண்டிய நிலைமை , ஆறு மாசடைந்துள்ளமை உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு மிதக்கும் கடைத்தொகுதியினை புதுப்பிப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருந்தனர். அதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

103 கடைகளைக் கொண்ட மிதக்கும் வணிக வளாகத்தின் கட்டுமான செலவு 312 மில்லியன் ரூபாவாகும். இராணுவம் மற்றும் கடற்படை கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் 312 மில்லியன் ரூபாவாக செலவு மட்டுப்படுத்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை கூறுகிறது. நகர  அபிவிருத்தி அதிகாரசபைக்கு  மிதக்கும்  கடைத்தொகுதி பெரியவொரு முதலீடாகும். அதற்காக செலவிடப்பட்ட தொகையை அந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதமாகவேனும் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மிதக்கும் கடைத்தொகுதி திறந்து வைக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஏராளமான உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தாலும் கடந்த நான்கரை ஆண்டுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. சிதைந்த பலகைகளை அகற்றுதல், மின்சார விளக்குகள் மீண்டும் அமைப்பது, தண்ணீரை சுத்திகரித்தல் மற்றும் மரங்களை நாட்டி சூழலை வனப்பாக்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அப் பகுதிகள் புனரமைக்கப்படும்.

இவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த இந்த கடைத்தொகுதியினை புதுப்பிப்பதில் கவனம் செலுத்துவது பொருத்தமானது என கோட்டை மிதக்கும் கடைத்தொகுதி வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர் துமிந்து விக்ரமராச்சி கூறுகிறார். இதை முறையாக பராமரிப்பதன் மூலம், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், வர்த்தகர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டவும் முடியும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கோட்டையில் இருந்து மருதானை வரை நடைபாதையுடன் இணைந்த அபிவிருத்தி வலயம் அமைக்கும் பணியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பெஸ்டியன் மாவத்தை மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை கொழும்பு கெதர பகுதியில் ஒரு நடைபாதை நிர்மாணிக்கப்படுவதுடன் அதனை இருந்து மருதானை சந்தி வரை நீட்டித்து எக்ஸ்பர்ட் சிட்டி வழியாக தொழில்நுட்ப கல்லூரி அருகில் கெலே பொல ஊடாக மீண்டும் கோட்டை புகையிரத நிலையம் வரை நீட்டிக்கப்படும்.

இதற்கிடையில், கடைகள், ஓய்வு பகுதிகள், உணவுக்கடைத் தொகுதிகள் மற்றும் மரங்களுடன் கூடிய சிறிய தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய கால அபிவிருத்தி திட்டத்தின் கீழ்கோட்டை மிதக்கும் கடைத்தொகுதி வளாகத்தின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, திண்மக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் விவகார இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா கூறுகையில் ,   ' 2015 க்குப் பிறகு வந்த அந்த அதிகாரிகளுக்கு இது தொடர்பாக எந்தப் பொறுப்பும் இல்லை. நாங்கள் இப்போது ஒரு நல்ல குழுவைக் கொண்டுள்ளோம்.      ஜனாதிபதி எமக்கு விருப்பமான பல விடயங்களை வழங்கியுள்ளார். மேலும் செயலாளர் முதல் அவருடன் நெருக்கமாக பணியாற்றிய ஒரு குழு மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அவர் செய்தவாறே அவர் அழியில் இந்த திட்டத்தை முடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்." என்கிறார்.