சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் ராஜஸ்தான் அணி 216 ஓட்டங்களை குவித்தது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டி இன்றைய தினம் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆறு ஓட்டத்துடன் தீபக் சஹாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்வடைந்தது.

இவர்கள் இருவரும் அதிரடிகாட்ட ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 129 ஓட்டங்களை குவித்தது.

சஞ்சு சாம்சன் 30 பந்துகளில் 73 ஓட்டங்களுடனும், ஸ்மித் 31 பந்துகளில் 47 ஒட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் சஞ்சு சம்சன் 11.4 ஆவது ஓவரில் 9 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக மொத்தமாக 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேவிட் மில்லரும் அதே ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களறிங்கிய வீரர்களுடன் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த ஸ்மித் 18.2 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ஜோப்ர ஆர்ச்சர் 8 பந்துகளில் 27 ஓட்டங்களுடனும் டோம் கரன் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர், லுங்கி நிகிடி மற்றும் சாவ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Photo Credit : IPL